பிடோக் நீர்த்தேக்கத்தில் நீர் விளையாட்டு: உடற்குறையுள்ளோர் உட்பட 600 பேர் பங்கேற்பு

பிடோக் நீர்த்தேக்கத்தில் நீர் விளையாட்டு: உடற்குறையுள்ளோர் உட்பட 600 பேர் பங்கேற்பு

3 mins read
eea3cd4c-2c68-4019-b952-934aaab6289d
பர்ப்பிள் மிதிப் படகு விளையாட்டில் சேவியர் ஓங்கும் (நடுவில்), அவரது குழுவினரும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடோக் நீர்த்தேக்கத்தில் நடைபெற்ற மாபெரும் நீர் விளையாட்டுகளில் சிறப்புத் தேவையுடையோர் உட்பட 600க்கும் மேற்பட்டோர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ஜூலை 5ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் 22 வயது சேவியர் ஓங் தனது குழுவினருடன் துடுப்புப் போட்டு படகைச் செலுத்தியபோது அவரது 73 வயது பாட்டியான மேக் குவான் யிங் பெருமையோடு பார்த்து ரசித்தார்.

தொடர்புத் திறன் குறைபாடு கொண்ட (ஆட்டிசம்) தனது பேரன் இதுபோன்ற குழு விளையாட்டில் பங்கேற்பார் என்று கனவிலும் அவர் எதிர்பார்க்கவில்லை.

பெற்றோர் விவாகரத்துக்குப் பிறகு சேவியரின் முக்கியப் பராமரிப்பாளராக இருந்துவரும் மேக், அவரது கோபங்களையும், குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் தனது அருகிலேயே இருக்க வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தையும் நன்கு அறிவார்.

ஆனால், ஜூலை 5 அன்று நடைபெற்ற முதலாவது ‘பர்ப்பிள் பேடல் ஃபெஸ்ட்’ திருவிழாவில் பங்கேற்ற 600 பேரில் சேவியரும் ஒருவராக இருந்தார். சிறப்புத் தேவையுடையோரை அவர்களது பராமரிப்பாளர்கள், பொதுமக்களுடன் ஒன்றிணைக்கும் அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சியாக நீர் விளையாட்டுத் திருவிழா நடைபெற்றது.

பங்கேற்பாளர்கள் அனைவரும் பாகுபாடு இல்லாமல் மற்றவர்களுடன் இணைந்து கடல் நாகப் படகு, துடுப்புப் படகு, மிதிப் படகு போன்றவற்றில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

சிறப்புத் தேவையுடையோரும் இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் மக்கள் கழகமும் ‘டிபி ஹார்ட்ஸ்’ என்ற அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த விழாவிற்கு முன்னோட்டமாக, மக்கள் கழகத்தின் ஓர் அங்கமான ‘பேஷன் வேவ்’ கடந்த ஜூன் மாதத்தில் பிடோக் நீர்த்தேக்கம், ஜூரோங் லேக் கார்டன்ஸ், செம்பவாங் ஆகிய இடங்களில் 12 துடுப்புப் படகு, கடல்நாகப் படகு பயிற்சிகளை இலவசமாக நடத்தியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதில் 140க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு இந்த முக்கிய நிகழ்வுக்கு முன்னதாக துடுப்புப் போடும் அடிப்படை முறைகளையும் நீர்நிலைப் பாதுகாப்பு விதிகளையும் கற்றுக்கொண்டனர்.

விளையாட்டின் மூலம் சிறப்புத் தேவையுடையோரைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பதற்காகப் பாடுபடும் ‘ரன்னிங்ஹவர்’ (Runninghour) உள்ளிட்ட அமைப்புகளும் இதில் பங்கெடுத்தன.

சேவியரின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு முக்கிய திருப்புமுனையை அவரது பாட்டி பெருமையுடன் பகிர்ந்துகொண்டார்.

கடந்த மார்ச் மாதம் சேவியரின் பணிப்பெண் அவரை சிறிது நேரத்தில் தவறவிட்டுவிட்டார்.

ஆனால், சேவியர் அணிந்திருந்த ‘டிராக்கர்’ கருவியின் மூலம் தானாகவே பாதுகாப்பாக வீடு திரும்பியதால் பராமரிப்பாளர்கள் உற்சாகமடைந்தனர்.

“ஊட்ரம் பார்க் நிலையத்தில் ரயில் ஏறி ஜூரோங் ஈஸ்ட் சென்று, அங்கிருந்து சுவா சூ காங் சென்று பின்னர் பேருந்து மூலம் வீட்டிற்கு அவர் வந்து சேர்ந்தார்,” என்று மேக் கூறினார்.

ஜூலை 5 அன்று துடுப்புப் படகோட்டிய மற்றொருவர் 24 வயது வெஸ்லி நியோ.

கவனக்குறைவு, அதிவேக இயக்கக் குறைபாட்டால் (ADHD) பாதிக்கப்பட்ட இவர், தனது தயக்கங்களை உடைத்தெறிய இந்தப் படகு விளையாட்டில் சேர்ந்தார்.

தொடக்கப் பள்ளியிலேயே இந்தக் குறைபாடு கண்டறியப்பட்ட நியோ, மற்றவர்களுடன் பழகுவதிலும் தொடர்புகொள்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக ‘ரன்னிங்ஹவர்’ அமைப்பில் இருக்கும் நியோ, “பயிற்சிகளின்போது அனைவரும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டனர், ஒருவரையொருவர் எப்படி ஊக்கப்படுத்தினர் என்பதைக் காண்பதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பலன். காலப்போக்கில் எங்களது குழுவின் துடுப்புப் போடும் வேகம் சீராகி, தண்ணீரில் எங்கள் தன்னம்பிக்கை அதிகரித்ததைக் காண்பது மறக்க முடியாத அனுபவம்,” என்றார்.

விளையாட்டுகள் மட்டுமின்றி, சிறப்புத் தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவும் சுயவிவரக் குறிப்பை மேம்படுத்துதல், மின்னிலக்க எழுத்தறிவு தொடர்பான பயிலரங்குகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்