முதலையின் நடமாட்டம் தென்பட்டதால் செந்தோசாவின் மூன்று கடற்கரைகளில் நீர் விளையாட்டுகள் நிறுத்தம்

முதலையின் நடமாட்டம் தென்பட்டதால் செந்தோசாவின் மூன்று கடற்கரைகளில் நீர் விளையாட்டுகள் நிறுத்தம்

படம்: ஷின் மின்

01 Feb 2026 - 10:49 am

1 mins read

செந்தோசா கோவ் நீர்ப்பகுதியில் முதலை ஒன்று தென்பட்டதை அடுத்து சிலோசோ, பலவான், தஞ்சோங் ஆகிய மூன்று கடற்கரைகளில் நீச்சல், படகோட்டம் போன்ற நீர் விளையாட்டுகள் மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

முதலை தென்பட்டது குறித்து சனிக்கிழமை (ஜனவரி 31) மாலை தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக செந்தோசா மேம்பாட்டுக் கழகமும் தேசிய பூங்காக் கழகமும் தெரிவித்தன.

“முதலை தென்பட்ட தகவல் உண்மையானது என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அதைத் தேடும் பணியில் ஒரு கூட்டுக் குழு உடனடியாகக் களமிறங்கியது. செந்தோசா மேம்பாட்டுக் கழகமும் தேசிய பூங்காக் கழகமும் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றன,” என்று செந்தோசா மேம்பாட்டுக் கழகம் சனிக்கிழமை ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

கடற்கரைகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து திறந்திருந்தாலும், மேற்கூறிய மூன்று கடற்கரைகளிலும் நீர் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்று கழகம் கூறியது.

செந்தோசா தீவின் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுக்காவல் பணிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
செந்தோசாமுதலைகடற்கரை