தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிராஞ்சி அணையில் நீர் டாக்சிகள், சைக்கிளோட்டப் பாதைகள் அமைக்க யோசனை

2 mins read
1c17e2c2-4524-44cc-89fb-81a299ef4997
கடற்கரையின் இந்தப் பகுதிக்கான கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் ஆய்வு, ஆகஸ்ட் 2023ல் தொடங்கி அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

செப்டம்பர் 27 அன்று வடமேற்கு சிங்கப்பூரில் உள்ள சுங்கை பூலோ சதுப்புநிலப் பகுதியின் நுழைவாயிலில் நின்று, பொதுமக்கள் சிலர் 75 ஆண்டுகள் முன்னோக்கி தங்கள் நினைவலைகளைக் கொண்டு சென்றனர்.

2100ஆம் ஆண்டுவாக்கில், கடல் மட்டம் உயர்வதால் கடலோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும். மேலும் உயரமான அலைகள் எழும்போது அல்லது புயல் நெருங்கும்போது நீர் மட்டம் தொடையைத் தொடும் உயரத்துக்கு அதிகரிக்கும் என்று ‘அருப்’ எனும் ஆலோசனை நிறுவனத்தின் மூத்த நகர்ப்புற வடிவமைப்பாளர் திரு ரெசா பிரதானா அவர்களிடம் கூறினார்.

நாட்டின் வடமேற்கு கடற்கரையில் 15 கி.மீட்டர் தூரத்துக்கான சிங்கப்பூரின் கடலோரப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து பொதுமக்களை ஈடுபடுத்துவதற்கான தேசிய நீர் அமைப்பான பியுபியின் ‘நமது கரையோரம் தொடர்பான கலந்துரையாடல்’ (Our Coastal Conversation) திட்டத்தின் அண்மைய நிகழ்வில் பங்கேற்ற 50 பேரில் இந்தக் குழுவும் இருந்தது.

சிங்கப்பூரின் தென்கிழக்கு கடற்கரை போன்ற பிற பகுதிகளுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், கடற்கரையின் இந்தப் பகுதியில் கவனம் செலுத்தும் முதல் அமர்வு இதுவாகும்.

லிம் சூ காங்கிலிருந்து உட்லண்ட்ஸ் வரை நீண்டுள்ள வடமேற்கு கடற்கரையை ஆய்வு செய்ய பியுபி மேற்கொண்ட முந்தைய முயற்சிகளைத் தொடர்ந்து, பொது ஈடுபாட்டுப் பயிற்சியும் நடைபெற்றது.

கடற்கரையின் இந்தப் பகுதிக்கான கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் இந்த ஆய்வு, ஆகஸ்ட் 2023ல் தொடங்கி அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருப் நிறுவனம் மேற்கொள்ள பணிக்கப்பட்ட இந்த ஆய்வுக்கு பொதுமக்களின் கருத்துகளும் பங்களிக்கும்.

இந்தக் கடற்கரைப் பகுதியானது தொழில்துறை இடத்தை உருவாக்கும் எதிர்கால சுங்கை காடுட் சுற்றுச்சூழல் வட்டாரம், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி, பல்லுயிர்ச்சூழல் நிறைந்த சுங்கை பூலோ ஈரநிலப் பகுதி, வரவிருக்கும் மண்டாய் சதுப்புநில, சேற்றுநில இயற்கைப் பூங்கா போன்றவற்றை உள்ளடக்கி இருக்கும்.

நிகழ்வின்போது, ​​பங்கேற்பாளர்கள் ஈரநிலப் பகுதி மற்றும் அருகிலுள்ள பிற இடங்களான கிராஞ்சி அணை, அணைக்கட்டு நுழைவாயில் ஆகியவற்றில் நடந்து சென்றனர். பின்னர் கடற்கரையை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாக்கலாம் என்பது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

கிராஞ்சி அணையின் குறுக்கே நடைபாதைகள், சைக்கிளோட்டப் பாதைகளை உருவாக்குதல், நீர் டாக்சிகள் உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டன. கடல் நீர், கிராஞ்சி நீர்த்தேக்கத்திற்குள் நுழைவதைத் தடுக்க, கிராஞ்சி ஆற்றின் நுழைவாயிலின் குறுக்கே கிராஞ்சி அணை 1975ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யானும் இந்த உரையாடலில் கலந்துகொண்டார்.

கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆரம்பகால விவாதங்கள் நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

“கடலோரப் பாதுகாப்பு என்பது சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்வேறு பங்குதாரர்கள் ஒன்றிணைய வேண்டிய ஒன்று. ஏனெனில், இயல்பாகவே, உயர்ந்து வரும் கடல்நீர் மட்டங்கள் நம் அனைவரையும் பாதிக்கின்றன,” என்றும் அவர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்