தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே இலக்கை நோக்கி பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் முறை மேம்பட வேண்டும்: பிரதமர் வோங்

2 mins read
47ad1d1b-7eda-4e5b-bb13-3b4e5d05be1c
சீனாவின் தியான்ஜின் நகரில் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஏஎஃப்பி

ஒரே இலக்கை நோக்கி பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் முறை மேம்பட வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் அது நீக்குப்போக்குள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

சீனாவின் தியான்ஜின் நகரில் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதமர் வோங், கேள்வி-பதில் அங்கத்தின்போது இக்கருத்தை முன்வைத்தார்.

அதற்கான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதன் பிறகு மற்ற நாடுகளும் சேர்ந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு செய்வதன் மூலம் வளர்ச்சியைச் சரியான பாதைக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றார் அவர்.

“நாம் எதைச் செய்தாலும் அது வெளிப்படையானதாகவும் மற்றவர்களை உள்ளடக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். அவற்றில் சேர பிறர் இன்னும் தயாராக இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால், எதிர்காலத்தில் அவர்கள் சேர்ந்துகொள்ளலாம். ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொள்ளலாம்,” என்றார் திரு வோங்.

ஒரே இலக்கை நோக்கி பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் முறையை ஒட்டுமொத்தமாக கைவிடுவதற்குப் பதிலாக அதை மேம்படுத்தும் வழிவகைகளைக் கண்டுபிடிக்குமாறு உலக நாடுகளைப் பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூருடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா கொண்டுள்ளபோதிலும் வர்த்தக உபரி இருக்கும்போதிலும் சிங்கப்பூருக்கான அடிப்படை வரியை அமெரிக்கா 10 விழுக்காடாக நிர்ணயித்துள்ளது.

“சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. குறிப்பிட்ட சில தெரிவுகள் மட்டுமே எங்களுக்கு உள்ளன. இதனால் வரிவிதிப்பு எங்களுக்குக் கவலை தருகிறது. பேரம் பேசும் அதிகாரம் எங்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் உள்ளது. ஓரங்கட்டப்படும் அபாயமும் உள்ளது,” என்று கலந்துரையாடலின்போது பிரதமர் வோங் கூறினார்.

எனவே, மக்களை ஒன்றிணைக்கவும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் தடைகளை தகர்த்தெறியவும் ஒரே இலக்கை நோக்கி பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் முறையை வலுப்படுத்தவும் சிங்கப்பூர் பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

ஒரே இலக்கை நோக்கி பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் முறை மீள்திறன்மிக்கதாக இருக்க வேண்டும் என்று திரு வோங் வலியுறுத்தினார். அது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் இக்காலகட்டத்துக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வோங் கூறினார்.

“முயற்சிகள் சிறியவை எனத் தோன்றக்கூடும். ஆனால் ஒரே மனப்போக்கு கொண்ட நாடுகள் பங்களித்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். புதிய, சீரான உலக நடப்புக்குத் தேவையான அடித்தளத்தைப் படிப்படியாக அமைக்க முடியும்,” என்றார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்