தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட்டாரப் பாதுகாப்புக்காக அமெரிக்காவுடன் தொடர்ந்து செயல்பட உறுதி: சான்

2 mins read
52751baa-f610-438d-897c-b789c4b53c56
அமெரிக்காவில் எக்சர்சைஸ் ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: பிரசன்னா கிரு‌ஷ்ணன்

போய்சி: தற்போது மாறியிருக்கும் உலக நிலவரத்தை எதிர்நோக்குவதுடன் முன்பைவிட மிகுந்த நிலையற்ற சூழலை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியிருக்கையில் இரு அம்சங்களில் சரியாகச் செயல்பட சிங்கப்பூர் உறுதியாய் இருப்பதாக அவர் கூறினார்.

அமெரிக்காவின் ஐடோஹோ மாநிலத்தில் உள்ள மவுன்டன் பேஸ் ஏர்ஃபோஸ் ஆகாயப்படைத் தளத்தில் நடைபெற்றுவரும் 10வது எக்சர்சைஸ் ஃபோர்ஜிங் சேபர் ராணுவப் பயிற்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வட்டார அளவில் பாதுகாப்பை ஊக்குவிக்க ஒரே மனப்போக்கைக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட சிங்கப்பூர் உறுதியாய் உள்ளது.

“அதோடு, பிறர் நம்முடன் பங்காளிகளாக இருக்க விரும்புவதற்கு வகைசெய்யவும் வட்டாரப் பாதுகாப்பில் நாம் பங்காற்றவும் தொடர்ந்து நமது ஆற்றல்களைக் குறிப்பிடத்தக்க அளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்று தமிழ் முரசின் கேள்விக்குப் பதிலளித்தார்.

“அதனால்தான் முறைகள்/தளங்களை வாங்குவது, நாம் நடத்தும் பயிற்சிகள் என எதுவாக இருந்தாலும் நாமும் மற்ற ஆயுதப் படைகளும் இணைந்து செயல்படும் ஆற்றலை மேம்படுத்துவதில் உறுதியாய் இருக்கிறோம்,” என்றும் திரு சான் குறிப்பிட்டார்.

ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியின் முக்கியத்துவம், எப்படி அது பலவகை ஆற்றல்களை ஒன்றிணைக்கிறது, சிக்கலான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்பட சிங்கப்பூர் ஆயுதப் படை எவ்வளவு தயாராய் இருக்கிறது ஆகியவற்றைப் பொறுத்திருக்கிறது என்றும் திரு சான் குறிப்பிட்டார்.

நவீன போர்க்களங்களில் பல்வேறு அம்சங்களை ஒன்றுசேர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய அவர், “ஒருங்கிணைப்பு என்பது நமது நான்கு (ராணுவ) பிரிவுகளுக்கு இடையே மட்டுமானதல்ல. அந்த நான்கு பிரிவுகளுடன் எவ்வாறு தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு போன்றவை சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களை ஒருங்கிணைப்பதும் அடங்கும். நம்மிடையே தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்புப் பொறியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் தொழில்நுட்ப அம்சங்களை இப்பயிற்சியில் சேர்க்கின்றனர்,” என்றும் விவரித்தார்.

ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் பங்கேற்போரை அமைச்சர் சான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) நேரில் சந்தித்தார். தமது அதிகாரத்துவ அமெரிக்கப் பயணத்தின் கடைசி அங்கமாக அவர் ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் சிங்கப்பூர் ஆயுதப் படையினர், தற்காப்புத் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோரைச் சந்தித்தார்.

ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியின் தளபத்திய நிலையத்தில் அமைச்சர் சான் (இடது).
ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியின் தளபத்திய நிலையத்தில் அமைச்சர் சான் (இடது). - படம்: பிரசன்னா கிரு‌ஷ்ணன்
ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்.
ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர். - படம்: பிரசன்னா கிரு‌ஷ்ணன்
ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டரில் ஆயுதங்களைப் பொருத்தும் ராணுவ வீரர்.
ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டரில் ஆயுதங்களைப் பொருத்தும் ராணுவ வீரர். - படம்: பிரசன்னா கிரு‌ஷ்ணன்

இந்நிலையில், சிங்கப்பூர் வாங்கும் புதிய பி-8ஏ ரக கடல்துறைச் சுற்றுக்காவல் விமானங்கள் 2030களின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் திரு சான் தெரிவித்தார். அவ்விமானங்கள், கூடுதல் சவால்மிக்கதாக இருந்துவரும் கடல்துறைப் பாதுகாப்பு நிலவரத்துக்கு ஏற்பச் சூழ்நிலைக்கேற்றவாறு தயார்நிலையில் இருப்பது சிங்கப்பூரின் ஆற்றலை மேம்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.

நான்கு புதிய பி-8ஏ ரக கடல்துறைச் சுற்றுக்காவல் விமானங்களைச் சிங்கப்பூர் வாங்கவிருப்பதாகக் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 10) அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்