சிங்கப்பூரின் மேம்பாடு ஒரு தொடர்ச்சியான பணி: பிரதமர் வோங்

2 mins read
14f032ff-2fad-4d4e-844f-f4cd9d495987
பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: லாரன்ஸ் வோங்/யூடியூப்

சிங்கப்பூர் தொடர்ந்து புதிய சாத்தியங்கள் குறித்துச் சிந்தித்து, அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் நாட்டை வடிவமைப்பதற்குத் துணிச்சலான நீண்டகாலத் திட்டங்களை உருவாக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

ஜூலை 27ஆம் தேதி தமது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்றில் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாம் நமது எல்லைகளை எட்டிவிட்டோமா?” என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய பிரதமர், சிங்கப்பூர் முதிர்ச்சியடைந்தபோதும் அதற்கு அப்பாலும் விரிவடையும் திறன் கொண்டது என்று அறுதியிட்டுக் கூறினார்.

சிங்கப்பூரை மேம்படுத்தும் பணி ஒருபோதும் முற்றுப்பெறாத ஒன்று என்பதை உறுதியாகக் கூறமுடியும் என்று கூறிய திரு வோங், “சிங்கப்பூரை நம் அனைவருக்குமான மேலும் சிறந்த இல்லமாக உருவாக்கத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வோம்,” என்றார்.

இதற்கு நீண்டகாலத் திட்டமிடல், நகர்ப்புறப் புத்தாக்கம், நம்மால் செய்ய முடியும் என்ற உணர்வு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்திய அவர், கடந்த காலத்திலிருந்து பல சிறந்த எடுத்துக்காட்டுகளை நினைவுகூர்ந்தார்.

தாம் மரின் பரேட் வட்டாரத்தில் வளர்ந்தது குறித்துப் பிரதமர் முதலில் பேசினார். அந்த வட்டாரம் நிலமீட்புத் திட்டம் மூலம் பெறப்பட்ட நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. அது பாதுகாப்பாக இருக்காது என்றும் அந்நிலம் மூழ்கிவிடும் என்றும் சிலர் கவலைப்பட்டனர்.

“இருப்பினும் எனது பெற்றோர் குழப்பமடையவில்லை. சொந்தமாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டைப் பெறும் வாய்ப்பு கிடைத்ததற்காக அவர்கள் பெருமைப்பட்டனர்,” என்று சொன்ன திரு வோங், அது புதிய தொடக்கங்களுக்கான காலகட்டமாக இருந்ததாகக் கூறினார்.

மரின் பரேடின் வரலாறு சிங்கப்பூர் முழுவதற்குமான வரலாறு; நம்பிக்கையோடு மேற்கொள்ளப்பட்ட செயல்கள் நனவானதைக் காட்டும் வரலாறு என்றார் திரு வோங்.

தொடர்புடைய செய்திகள்

அதேபோல் இந்த வட்டாரத்தின் விமானப் போக்குவரத்து நடுவமாகத் திகழும் நம்பிக்கையுடன் 1981ல் வர்த்தகச் செயல்பாட்டைத் தொடங்கிய சாங்கி விமான நிலையத்தையும் அவர் சுட்டினார். “இப்போது நம்மிடம் ஜுவல் சாங்கி உள்ளது. விரைவில் ஐந்தாம் முனையம் செயல்படும்,” என்றார் அவர்.

உலகின் தலைசிறந்த கடல்துறை நடுவமாக விளங்கும் சிங்கப்பூரின் கனவும் நனவாகியுள்ளது என்றார் திரு வோங். துவாஸ் துறைமுகத்தைக் கட்டிவருகிறோம். அது செயல்படத் தொடங்கும்போது உலகின் ஆகப் பெரிய தானியக்கக் கொள்கலன் துறைமுகமாகத் திகழும் என்பதை அவர் சுட்டினார்.

மரினா பே வட்டார மேம்பாடு முறையான திட்டமிடலுக்கும் கடின உழைப்புக்குமான சான்று என்றார் பிரதமர். அதைப்போல் ஆறு மடங்கு அளவிலான தென் நீர்முகப்புப் பகுதியை (Great Southern Waterfront) மேம்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

தாழ்வான பகுதியில் உள்ள தீவு நாடு என்ற முறையில் உலகளாவிய வெப்பநிலை உயர்வு, உயரும் கடல்மட்டம் போன்ற சவால்களையும் பசுமையான எரிபொருள் தொடர்பான சிக்கல்களையும் சிங்கப்பூர் எதிர்க்கொள்கிறது. இவை நாட்டின் பொருளியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

“இத்தகைய சவால்களை வாய்ப்புகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை நமக்கு அவசியம். கடந்த காலத்தைப் போன்றே பாதிப்புகளை பலங்களாக மாற்றும் வல்லமை குறித்த நம்பிக்கை வேண்டும்,” என்று பிரதமர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்