சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முற்பாதியில் 17 பணியிட மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.
ஆண்டு முழுவதற்குமான மதிப்பீட்டில் வேலையிட மரண விகிதம் 100,000 தொழிலாளர்களுக்கு 0.92ஆக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
இது ஒரு நம்பிக்கையான அறிகுறி என்றும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பில் 2028ஆம் ஆண்டிற்கான இலக்கை அடைய நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்றும் திரு தினேஷ் கூறினார். அந்த விகிதம் 1.0க்குக்கீழ் இருக்க வேண்டும் என்பது இலக்கு.
புதன்கிழமை (செப்டம்பர் 24) சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் சிறப்புரையாற்றினார்.
மனிதவளத் துறைசார்ந்த செயல்பாடுகளும் மேம்பட்டுள்ளதாகத் திரு தினேஷ் சொன்னார்.
“உற்பத்தித் துறையிலுள்ள உலோக வேலைத் தொழிலை எடுத்துக்காட்டாகக் கொண்டால் முன்பு இந்தத் துறையில் அதிகப்படியான உயிரிழப்புகளும் பலத்த காயமடையும் சம்பவங்களும் பதிவாயின. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது,” என்றார் அவர்.
வேலையிடப் பாதுகாப்பும், சுகாதாரமும் நம்பிக்கை, ஊழியர்கள் மீது காட்டும் பரிவு, கடப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் திரு தினேஷ் குறிப்பிட்டார்.
விருது விழாவில் 10 பிரிவுகளில் மொத்தம் 301 நிறுவனங்களும் தனிநபர்களும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பிஸ்சேஃப் (bizSAFE) திட்டம் குறித்துப் பேசிய திரு தினேஷ், அத்திட்டம் ஆபத்துகளை முறையாக அடையாளம் கண்டு, அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை நிறுவனங்களுக்குக் கற்றுக் கொடுத்ததன் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் பாதுகாப்பானதாக மாற உதவியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மனிதவள அமைச்சும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றமும் முத்தரப்பு, நிறுவன, பங்காளிகளுடன் சேர்ந்து பிஸ்சேஃப் திட்டத்தை மேம்படுத்துவதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் திரு தினேஷ் கூறினார்.
பிஸ்சேஃப் திட்டம் மேம்பட்ட வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் கவனம் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
“இதன் மூலம் பிஸ்சேஃப் அங்கீகாரம், சேவை வழங்குவோர் பாதுகாப்பான ஒப்பந்ததாரர்களை நம்பிக்கையுடன் தேர்வு செய்ய முடியும்,” என்றார் திரு தினேஷ்.
கப்பல் பட்டறைகளில் கப்பலின் தளம், தடுப்புச் சுவரில் துளையிடுதல் போன்ற வேலைகள் மிகவும் ஆபத்தான பணிகளில் ஒன்றாகும்.
அந்த இடங்களில் அதிக வெப்பம் நிலவுவதுடன், இயந்திரங்களிலிருந்து வரும் தீப்பொறிகளும் உருகிய உலோகங்களும் தீ வெடிப்பு, காயம் ஏற்படும் அபாயங்களை உருவாக்குகின்றன.
இதை எதிர்கொள்ள ‘ஸ்பார்க் ஷீல்டு’ என்ற பொறியியல் கட்டுப்பாட்டு முறையை சீட்ரியம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இது தீப்பொறிகளைக் கட்டுப்படுத்துவதிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பிலும் ஒரு புதிய அணுகுமுறையை வகுக்கிறது.
சீட்ரியம் நிறுவனத்திற்குப் புத்தாக்கப் பிரிவில் விருது வழங்கப்பட்டது. ஸ்பார்க் ஷீல்டு முறையை அறிமுகப்படுத்திய பொறியாளர்களில் ஒருவர் சக்தி வேல் கோபால், 33.
“ஸ்பார்க் ஷீல்டு செயலாக்க நன்மைகளையும் அளித்துள்ளது. அது நேரத்தை மிச்சப்படுத்தி, புகையின் அளவைக் குறைத்து, ஆரோக்கியமான வேலைச் சூழலுக்கு உதவுகிறது. இவையனைத்தும் குறிப்பிடத்தக்க அளவு செலவை மிச்சப்படுத்த உதவும். ஸ்பார்க் ஷீல்டு ஊழியர்களைப் பாதுகாக்கும் ஒரு கண்டுபிடிப்பாகத் திகழ்கிறது,” என்று சொன்னார் சக்தி வேல்.
எதிர்காலத்தில், வெளியாகும் புகையின் அளவைக் குறைப்பதற்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த சக்தி வேலும் அவரது சக ஊழியர்களும் திட்டமிட்டுள்ளனர்.