‘வேலையில்லா வளர்ச்சி’ ஏற்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும்: இங் சீ மெங்

நாடாளுமன்றத்திடம் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் கோரிக்கை

‘வேலையில்லா வளர்ச்சி’ ஏற்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும்: இங் சீ மெங்

2 mins read
1965061d-ead9-42b0-8efd-453b2b8f7498
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (மே 5) கூடும்போது பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவிருக்கின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், ‘வேலையில்லா வளர்ச்சி’ ஏற்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுக்கவிருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. ஊழியர்கள் அவற்றைச் சமாளிப்பதற்குத் தொழிற்சங்கக் காங்கிரஸ் எவ்வாறு உதவும் என்பது பற்றி அவர் விரிவாக எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை (மே 5) நாடாளுமன்றம் கூடும்போது அதன் தொடர்பிலான தீர்மானத்தைத் திரு இங் முன்வைப்பார் என்று நம்பப்படுகிறது.

சிங்கப்பூரின் அடுத்த கட்டப் பொருளியல் வளர்ச்சியில், புதிய தொழில்நுட்பங்களின் சக்தியை மன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்மானம் அழைப்பு விடுக்கும்.

சிங்கப்பூரின் பொருளியல் முன்னேற்றம் என்பது அனைவரையும் அரவணைக்கும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதை மன்றம் உறுதிசெய்ய வேண்டும் என்று அது கேட்டுக்கொள்ளும். புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றி, ஒன்றிணைந்து முன்னேற நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மன்றம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்தும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் வரக்கூடிய இடையூறுகள் பற்றியும் மன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவிருக்கின்றனர்.

மன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும் விவகாரங்கள் குறித்துத் திங்கட்கிழமை (மே 4) வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பள்ளிகளில் பகடிவதை குறித்த கல்வி அமைச்சின் மறுஆய்வும் மன்றக் கூட்டத்தில் பேசப்படவிருக்கிறது. அதன் தொடர்பில் மன்ற உறுப்பினர்கள் மொத்தம் 23 கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அந்த விவகாரத்தைக் கையாள்வதற்குக் கூடுதல் வளங்களை ஒதுக்கவேண்டும்; பகடிவதை குறித்துப் புகாரளிப்பதற்குரிய வழிகளை மேம்படுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகளை அமைச்சு சென்ற மாதம் (ஏப்ரல்) வெளியிட்டிருந்தது. பிரம்படி உட்பட கடுமையான ஒழங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்பில் கூடுதல் மனிதவளத்தைப் பெறப் பள்ளிகளுக்கு அதிக நிதியுதவி தரப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

அமைச்சு, அதன் பரிந்துரைகளின் செயல்திறனை எவ்வாறு கணிக்கும் என்றும் அதற்கு என்ன மாதிரியான அளவீடுகளைப் பயன்படுத்தும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேள்விகளை எழுப்புவர்.

குறிப்புச் சொற்கள்