தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒர்க் பெர்மிட்டை புதுப்பிக்க லஞ்சம்: துப்புரவு நிறுவன மேலாளர் சிக்கியது பற்றி புதிய தகவல்கள்

2 mins read
f88a10a8-3d25-4f90-91f4-74cec54e90d4
பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒர்க் பெர்மிட்டை புதுப்பிக்க வெளிநாட்டு ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய குத்தகை நிறுவனம் ஒன்றின் அதிகாரி பிடிப்பட்ட விவகாரம் ஆகப் பெரிய லஞ்ச ஊழல் சம்பவங்களில் ஒன்று என மனிதவள அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

நீ சூன் ஈஸ்ட் குடியிருப்புப் பேட்டை துப்புரவுப் பணி குத்தகையாளரான ‘லியான் செங் கான்ட்ராக்டிங்’ நிறுவனத்தின் செயலாக்க மேலாளர் டேரிக் ஹோ சியாக் ஹாக், 55, என்பவருக்கு லஞ்ச ஊழல் குற்றத்திற்காக 2024 நவம்பர் 14ஆம் தேதி 24 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 57 பங்ளாதேஷ் ஊழியர்களிடம் இருந்து $396,440 வசூலித்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் பணம் கொடுத்த துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றனர்.

மனிதவள அமைச்சின் வெளிநாட்டு மனிதவள நிர்வாகப் பிரிவு இயக்குநர் ஏட்ரியன் குவேக் கூறும்போது, தமது அமைச்சு இதுநாள் வரை விசாரித்த ஆகப்பெரிய லஞ்ச ஊழல் சம்பவங்களில் இதுவும் ஒன்று என்றார்.

அது எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை, மற்றோர் அதிகாரியான ஃபெலிசியா லிம், ஜனவரி 26ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் விளக்கினார்.

கடந்த 2020 நவம்பர் மாதம் பொதுமக்களிடம் இருந்து வந்த ஒரு புகாரில் பாதிக்கப்பட்ட இரு ஊழியர்களின் பெயர் இடம்பெற்று இருந்தது. அந்த இரு ஊழியர்களை பெண்டமியர் ரோட்டில் உள்ள அமைச்சின் அலுவலகத்திற்கு ரகசியமாக அழைத்து வந்து இரவு 10 மணியளவில் விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, ஹோ மேலாளராக இருந்த நீ சூன் ஈஸ்ட் மற்றும் பாசிர் ரிஸ்-பொங்கோல் பேட்டைகளுக்கு 2020 நவம்பர் 19ஆம் தேதி சென்ற அதிகாரிகள் அவருக்குக் கீழ் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களிடம் விசாரித்தனர்.

பின்னர், ஹோவும் லஞ்சப் பணத்தை வசூலித்த வெளிநாட்டு மேற்பார்வையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதே நாளில் ஹோவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

ஹோவும் அவருடன் வேலை செய்த ரகிபுல் என்பவரும் 2014ஆம் ஆண்டு முதல் லஞ்ச விவகாரத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டு ஊழியரின் ஒர்க் மிட்டை ஓராண்டுக்குப் புதுப்பிக்க $1,500, ஈராண்டுக்குப் புதுப்பிக்க $3,000 என லஞ்சம் வசூலிக்கப்பட்டது. இந்தப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை ($500, $1,000) ரகிபுல் எடுத்துக்கொண்டார்.

லஞ்சம் கொடுத்த ஊழியர்களில் ஒருவரான ரஹ்மான் லுட்ஃபார், 37, லஞ்சம் கொடுப்பது சட்டவிரோதம் என்று தெரிந்தும் ஒர்க் பெர்மிட்டை புதுப்பிக்க ஹோ பணம் கேட்டபோது அதனை மறுக்க பயமாக இருந்தது என்றார்.

பணம் கொடுக்காவிட்டால், வேலை பறிக்கப்பட்டு சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்று தாம் அஞ்சியதாக அவர் தெரிவித்தார்.

நீ சூன் ஈஸ்ட் நகர மன்ற துப்புரவாளராக வேலை செய்த அவர், தமது ஒர்க் பெர்மிட்டை புதுப்பிக்க நான்கு ஆண்டுகளில் ஹோவுக்கு $6,000 கொடுத்ததாகக் கூறினார்.

மற்றோர் ஊழியரான ஹனிஃப் முகம்மது, நான்காண்டுகளில் ஹோவிடம் $5,600 கொடுத்ததாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்