பொது வீடமைப்பில் இடம்பெறும் வீடுகள் எப்போதும் சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான விலையில் இருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது அவர் அந்த உறுதியை அளித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள பல்கலைக்கழக கலாசார மையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) நடைபெற்ற அந்த நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 900 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
“வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதிய வீடுகளுக்கான விலையை வருமானத்துடன் தொடர்புடையதாக வைத்திருக்குமே தவிர, மறுவிற்பனை விலைக்கு ஏற்ப அதனை நிர்ணயிக்காது. பொது வீடமைப்பு என்பது கட்டுப்படியான விலையில் இருப்பதை அந்தப் போக்கு உறுதிசெய்யும்.
“அரசாங்கத்தின் பல்வேறு உதவிகள் மூலமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மானியங்கள் வாயிலாகவும் வீடுகளின் விலை இப்போதும் எப்போதும் சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியானதாகவே தொடரும் என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவிக்கிறேன்,” என்றார் அவர்.
ஒரு குடும்பத்தின் வருடாந்திர இடைநிலை வருமான விகிதம் இடைநிலை வீட்டு விலையைக் காட்டிலும் 5க்குக் கீழ் இருந்தால் கட்டுப்படியான விலையாகக் கருதலாம் என ‘யுஎல்ஐ’ என்னும் உலக நகர்ப்புற ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்து உள்ளது.
அதாவது, வீட்டை வாங்குவோரின் வருடாந்தர குடும்ப வருமானத்தைக் காட்டிலும் வீட்டின் விலை ஐந்து மடங்கிற்குக் கீழ் இருப்பதைக் காட்டுகிறது அந்தக் கணக்கு.
அதன்படி பார்க்கையில், சிங்கப்பூரில் வீவக வீடுகளின் விலைகள் 4.7 என்னும் விகிதத்தில் இருப்பதாக கடந்த மே மாதம் ‘யுஎல்ஐ’ வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வீட்டு விலைகள் மட்டுமல்லாது, தம்மிடம் கேட்கப்பட்ட பிற கேள்விகளுக்கும் பிரதமர் வோங் பதிலளித்தார்.
‘சிங்கப்பூர்க் கனவு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், புவிசார் அரசியல் தொடங்கி, ஒரே பாலினத் திருமணம் வரையிலான பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு இருந்தன.
அரசாங்கக் கருத்தறியும் பிரிவான ‘ரீச்’ மற்றும் மாணவர்கள் வழிநடத்தும் வர்சிட்டி வாய்சஸ் என்னும் இயக்கம் இணைந்து அந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

