தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொகுதி எல்லை மாறினாலும் பாசிர் ரிஸ்-சாங்கி தொகுதியில் போட்டி: எஸ்டிஏ

2 mins read
47e0497f-6b53-42d5-84c1-3829569b883e
 சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களுடன் தலைவர் திரு டெஸ்மண்ட் லிம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23ஆம் தேதி) லோயாங் உணவங்காடி நிலையத்தில் குடியிருப்பாளர்களை சந்திக்கும் காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொகுதி எல்லையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தபோதிலும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி (எஸ்டிஏ), பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23ஆம் தேதி) அறிவித்துள்ளது. 

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும் அதன் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட ஏழு பேரும் லோயாங் பாயிண்ட் கடைத்தொகுதி, ஃபுளோரா எஸ்டேட் பகுதியில் தொகுதி உலா மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் உரையாடினர்.

 சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி, பிகேஎம்எஸ் எனப்படும் சிங்கப்பூர் மலாய் தேசிய கட்சி, சிங்கப்பூர் ஜஸ்டிஸ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி அமைப்பாகும். கடந்த சில ஆண்டுகளாக பாசிர் ரிஸ் குடியிருப்புப் பகுதிகளில் தொகுதி உலா மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறோம் என்று திரு லிம் கூறினார்.

எனவே அங்கு போட்டியிடுவது கட்சியின் கடமை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் பாசிர் ரிஸ்-பொங்கோல் தொகுதியில் போட்டியிட்டு வந்தபோதும் அது வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

“சாங்கி தொகுதி பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியின் ஒரு பகுதி. எனவே இங்கிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் சேவையாற்றுவது எங்கள் கடமையாகும்,” என்று அவர் கூறினார். 

வாழ்க்கைச் செலவினம், வேலைப் பாதுகாப்பு, கல்வி, வீடமைப்பு போன்றவை சிங்கப்பூரர்களுக்கு முக்கிய பிரச்சினைகளாக விளங்குகின்றன என்று சுட்டினார்.  “தொகுதி எல்லையை எப்படித்தான் மாற்றி அமைத்தாலும் இந்தப் பிரச்சினை நீடிக்கும்,” என்று அவர் விளக்கினார். 

“இந்தத் தீவில் வாழும் காலம்வரை இதுபோன்ற பிரச்சினைகள் தலை தூக்கும். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் பணி மக்கள் குரலைப் பிரதிபலித்து அவர்களுக்கு தேவைப்படும்போது உதவுவது,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்