வாடிக்கையாளர்களுக்குத் தவறான கண்ணோட்டத்தைத் தரும் அம்சங்கள் தங்கள் இணையத்தளங்களில் இருந்த காரணத்திற்காக சிங்கப்பூர்ப் போட்டி, பயனீட்டாளர் ஆணையம் (சிசிஎஸ்), மின்சாரப் பொருள்கள் மற்றும் வீட்டு சாதனங்களை விற்கும் கோர்ட்ஸ், பிரிசம்+ (Courts, Prism+) ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
கோர்ட்ஸ், வாடிக்கையாளர்கள் கேட்காமலேயே அவர்களின் ‘ஷாப்பிங் கார்ட்’ எனப்படும் வாங்கும் பொருள்களுக்கான மின்கூடையில் பொருள்களைச் சேர்த்தது தெரிய வந்ததாக சிசிஎஸ் திங்கட்கிழமை (டிசம்பர் 8) அறிக்கையில் தெரிவித்தது.
அதேபோல், பொருள்களை வாங்குமாறு வாடிக்கையாளர்களை நெருக்கும் வகையில் தருவதற்கு பிரிசம்+ போலி நேரக்கெடு கடிகாரங்களைப் (countdown timer) பயன்படுத்தியதும் எந்தப் பொருள்கள் விற்பனைக்கு எஞ்சியுள்ளன என்பதன் தொடர்பில் போலித் தகவல் அளித்ததும் தெரிய வந்ததாக சிசிஎஸ் குறிப்பிட்டது.
பயனீட்டாளர்கள் புகார் தந்ததையடுத்து சிசிஎஸ் இத்தகவல்களைத் தெரிந்துகொண்டது. ஆணையம், கடந்த ஜூன் மாதம் இந்த விவகாரத்தில் தலையிட்டது.
கோர்ட்ஸ், வாடிக்கையாளர்களின் மின்கூடையில் அவர்கள் கேட்காமலேயே பொருள்களைச் சேர்க்கும் பழக்கத்தைக் கைவிடப்போவதாக சிசிஎசிடம் எழுத்துபூர்வமாக உறுதியளித்தது. அந்த வகையில் தங்களின் இணையத்தளத்தை மாற்றியமைக்கவும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இழந்த பணத்தைத் திருப்பித் தரவும் கோர்ட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
பிரிசம்+, போலி நேரக்கெடு கடிகாரங்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணம் என்று விளக்கமளித்தது. இப்போது அவற்றைச் சரிசெய்துவிட்ட அது, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடப்போவதில்லை என்று சிசிஎசுக்கு எழுத்துபூர்வமாக உறுதியளித்தது.
வர்த்தகங்கள் நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடுவது தெரிய வந்தால் வார நாள்களில் காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து மணிக்குள் 6227-5100 என்ற தொலைபேசி எண் மூலம் அல்லது www.crdcomplaints.azurewebsites.net என்ற இணையத்தளம் வாயிலாக சிசிஎசிடம் தெரியப்படுத்தலாம்.

