தோல் அழற்சி நோயாளிகளுக்கு சுகாதார அமைச்சு வழங்கவுள்ள ஆதரவுக்கு வரவேற்பு

தோல் அழற்சி நோயாளிகளுக்கு சுகாதார அமைச்சு வழங்கவுள்ள ஆதரவுக்கு வரவேற்பு

2 mins read
குழந்தைகளே பெரியோரைவிட தோல் அழற்சிக்கு ஆளாகின்றனர்
b7956388-fe6c-4f34-b096-a66d0fb328c7
தோல் அழற்சி நோய் பாதித்துள்ள 35 வயதான செல்வி உர்சுலா சோ நோயாளி ஆதரவுக் குழுவொன்றைத் தொடங்கியுள்ளார். அவரது முழங்கை உள்பாகத்தை சிரங்குகள் தாக்கியுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

தீராத தோல் அழற்சி (எக்ஸிமா) நோயுடன் போராடும் நோயாளிகளுக்கு சுகாதார அமைச்சு கூடுதல் ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிப்பதை அந்நோயினால் வாடும் பலர் வரவேற்றுள்ளனர்.

இந்த நாள்பட்ட உடல்நலப் பாதிப்பை அரசாங்க மானியங்கள் மற்றும் மருத்துவச் செலவுகளுக்குத் தங்கள் மெடிசேவ் சேமிப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் திட்டத்தில் சேர்ப்பது குறித்த சுகாதார அமைச்சின் முடிவு அந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், ஹைப்பர்தைராய்ட் உள்ளிட்ட நெடுநாள் சிகிச்சை தேவைப்படும் 25 வகையான நோய்களைச் சுகாதார அமைச்சு நீண்டநாள் பராமரிப்புத் திட்டத்தில் (CDMP) இணைக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கடந்த மார்ச் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அப்போது எக்ஸிமா போன்ற மற்ற நோய்களையும் திட்டத்தில் உள்ளடக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு, இவ்வாண்டு அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அந்நோயினால் பாதிப்படைந்துள்ள பலர், அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டத்தால் மானியங்கள் கிடைப்பதையும் மெடிசேவ் பயன்படுத்தும் வாய்ப்பையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் 2018ல் வெளியிடப்பட்ட மருத்துவச் சஞ்சிகையில் சிங்கப்பூரில் ஏறக்குறைய 13.1 விழுக்காட்டினர் எக்ஸிமா எனப்படும் விரைவில் குணமாகாத சிரங்குகளை உருவாக்கும் தோல் அழற்சியால் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைச் சுகாதார அமைச்சின் பராமரிப்புச் செயல்திறனுக்கான அமைப்பு (ACE) பிப்ரவரி 27 வெளியிட்ட வழிகாட்டியில் தெரிவித்துள்ளது.

குழந்தைகளே பெரியோரைவிட தோல் அழற்சிக்கு ஆளாகின்றனர் என்பதையும் அமைப்பு விவரித்துள்ளது. தூசி, வெப்பம், வியர்வை, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் தோல் அழற்சி ஏற்படலாம். ஒருவருக்கு ஒருவர் அந்நோயின் தன்மை மாறுபடும் என்று தேசிய தோல் சிகிச்சை நிலையத்தின் (NSC) இணையத் தளம் தெரிவிக்கிறது.

முற்றிலும் இந்நோயைக் குணப்படுத்த முடியாது என்ற கருத்து இருந்தாலும் தோல் பாதிப்பை முறையான சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இத்திட்டம் அமலுக்கு வந்தால், நீண்டகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிதிச் சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சுகாதார அமைச்சுமருத்துவம்நோயாளிகுழந்தைகள்