சீனா ‘ஏஐ’ துறையில் கோலோச்சுவது குறித்து அமைச்சர் விவியன் கருத்து

சீனா ‘ஏஐ’ துறையில் கோலோச்சுவது குறித்து அமைச்சர் விவியன் கருத்து

படம்: வெளியுறவு அமைச்சு

27 Sep 2026 - 5:46 pm

2 mins read

ஃபிலடெல்ஃபியா: சீனாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வெற்றிப் பயணம், 150 ஆண்டுகளுக்கு முன்பு செய்த உத்திபூர்வத் தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்ற அந்நாட்டின் உறுதியையே பிரதிபலிக்கிறது என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஆசிய சங்கத்தின் உலகத் தலைவரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமருமான திரு கெவின் ரட்டுடன் செப்டம்பர் 25ஆம் தேதி நடத்தப்பட்ட உரையாடலின்போது அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார்.

சீனா தொழிற்புரட்சியைத் தவறவிட்டது, ஆனால் அதே தவற்றை அது மீண்டும் ஒருமுறை செய்யாது என்று அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் கூறினார்.

“தொழிற்புரட்சியைத் தவறவிட்டதால், சீனா ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அவமானங்களையும் சமமற்ற ஒப்பந்தங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. இம்முறை அந்தத் தவற்றை மீண்டும் செய்யச் சீனாவுக்குச் சிறிதும் விருப்பமில்லை,” என்று அமைச்சர் ஒரு மணிநேர உரையாடலில் சுட்டிக்காட்டினார். இதில் சீனாவின் போட்டியை அமெரிக்கா அணுகும் விதத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.

“இது அமெரிக்காவுடனான போட்டி அல்லது முதலிடம், இரண்டாமிடம் பிடிப்பது பற்றியது மட்டுமன்று என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘இது என் முறை, என் பொற்காலம். என்னிடம் திறமையான மனிதவளமும் மூளை பலமும் இருக்கும்போது என்னை ஏன் யாராவது தடுக்க வேண்டும்?’ என்பதே சீனாவின் எண்ணமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்தக் கடுமையான போட்டியானது அமெரிக்காவிற்கும் சோவியத் நாடுகளுக்கும் இடையே நிலவிய போட்டியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் கூறினார்.

“இதில் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், அமெரிக்கா, சீனா மற்றும் நாம் அனைவரும் இயங்கும் ஏஐ தொழில்நுட்பத்துக்கான கணித, கணக்கீட்டு அடித்தளம் ஒரே மாதிரியானதுதான். கணிதவியலாளர்கள், நுட்பங்கள், இயந்திரங்கள் அனைத்தும் ஒன்றே. இது பொதுவான அமைப்பாக இருப்பதாலும் போட்டி வெளிப்படையாக இருப்பதாலும் இதன் வளர்ச்சி வேகம் வியக்கத்தக்க வகையில் உள்ளது,” என்றார் அவர்.

சீனா அதன் வெற்றியை ஒரு சமமற்ற சூழலில் கட்டமைத்து வருகிறது என்று திரு ரட் சுட்டினார்.

சீனாவின் பலவீனமான உள்நாட்டுப் பயன்பாட்டையும் மற்றப் பொருளியல்களில் வெள்ளமெனப் பாய்ந்துள்ள அதன் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியையும் அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.

“சீனாவில் நடப்பது, அதன் தொழில்நுட்ப-தொழில்துறை உத்தியில் அரசாங்கம் செலுத்தும் முதலீடு மற்றும் நிகர ஏற்றுமதி மட்டுமே; இது நீடிக்க முடியாத ஒன்று,” என்றார் திரு ரட்.

“இந்த உரையாடலைப் பார்ப்பவர்கள் திரு கெவின் ரட் அல்லது என்னுடன் உடன்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் உங்களை யோசிக்கவைப்பதில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால், அதுவே எங்களின் வெற்றி,” என்று அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சீனாஏஐபாதுகாப்புஐக்கிய நாட்டு நிறுவனம்அமெரிக்கா