சமூக ஊடகக் கணக்குகளை முடக்கி, உரிமையாளர் போல ஆள்மாறாட்டம் செய்து பணம் கேட்கும் மோசடி தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களில் குறைந்தபட்சம் 128 புகார்கள் பதிவாகியுள்ளன.
இதில் பொதுமக்கள் குறைந்தது $249,000 தொகையை இழந்துள்ளனர் என்று புதன்கிழமை (அக்டோபர் 21) காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஏமாற்றுப்பேர்வழிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக ஊழியர் உரையாடுவதுபோல வாட்ஸ்அப் வழியே தகவல் அனுப்புவார்கள்.
வங்கிப் பரிவர்த்தனைகளில் சிக்கல் அல்லது தங்களின் சார்பில் பணம் செலுத்த வேண்டும் போன்ற காரணங்களைக் கூறி மோசடிக்காரர்கள் பணம் கேட்பார்கள். குழந்தைகள் பேசுவதுபோல நடித்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) படிப்பு அல்லது மாணவர் பரிமாற்றத் திட்டங்களுக்குப் பணம் செலுத்துமாறு பெற்றோரிடம் கேட்கப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதுபோன்ற அசாதாரணப் பணக் கோரிக்கைகள் வந்தால், தொடர்புடையவரை நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தும்வரை பணத்தை அனுப்ப வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் ‘இரண்டு அடுக்குச் சரிபார்ப்பு’ (Two-step verification) வசதியைச் செயல்படுத்துமாறும், தேவையற்ற சாதனங்களின் இணைப்புகளை அகற்றுமாறும் அது வலியுறுத்தியது.
மோசடிகளில் இருந்து பாதுகாக்க ‘ஸ்கேம்ஷீல்ட்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். அசாதாரணப் பணக் கோரிக்கைகள் வந்தால் உடனடியாகத் தொடர்புடையவரை நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதி செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டதாகச் சந்தேகப்பட்டால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு கணக்கை முடக்குவதுடன், காவல்துறையிலும் புகார் அளிக்க வேண்டும்.
மேலதிக விவரங்களுக்கு www.scamshield.gov.sg என்ற இணையத்தளத்தைக் காண்க அல்லது 1799 என்ற 24 மணி நேர உதவி எண்ணில் தொடர்புகொள்க.
சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டு முதல் மோசடிகளால் $4 பில்லியனுக்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டுள்ளது. 2026ன் முதல் பாதியில் $410.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இழப்புத் தொகை சற்று குறைந்திருந்தாலும், முக்கியக் குற்றச்செயல்களில் மோசடிகளே முதலிடத்தில் இருப்பதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அரசு அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளிலும் முதலீட்டு மோசடிகளிலும் அதிகம் ஏமாந்து, சராசரியாக நபர் ஒருவருக்கு $42,347 வரை இழந்துள்ளனர்.
