குறைந்தபட்சமாக சராசரி $20,000 மாத சம்பளத்துடன், விமானிப் பயிற்றுநர்களே சிங்கப்பூரில் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர்.
கிட்டத்தட்ட அவர்கள் அளவுக்கு வருமானம் ஈட்டுபவர்களாக சராசரி $19,750 மாத வருமானத்துடன் அந்நியச் செலாவணி தரகர்களும் $17,972 ஈட்டும் நிறுவன சட்ட ஆலோசகர்களும் உள்ளனர்.
மனிதவள அமைச்சு வெளியிட்ட ஆக அண்மைய தொழில் சம்பள ஆய்வு, துறைசார்ந்த சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு, தனியார் துறை நிறுவனங்களைச் சேர்ந்த 407,800 சிங்கப்பூர் ஊழியர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு துறையிலும் குறைந்தது தலா 25 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத் துறை ஊழியர்கள் ஆய்வில் சேர்க்கப்படவில்லை. எனவே, ஆகாயப்படை விமானப் பயிற்றுவிப்பாளர், நீதித்துறை, அமைச்சுகளில் உள்ள சட்ட ஆலோசகர் போன்ற பொறுப்புகளின் சம்பளம் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஆகக் குறைந்த சம்பளம் பெறுவோரில், பேருந்து ஊழியர்கள், சிவில் பொறியியல், கட்டட கட்டுமான ஊழிர்கள், சலவைத்துறை ஊழியர்கள் உள்ளனர். இவர்களது மாத வருவாய் சராசரியாக $1,400 முதல் $1,560 வரை உள்ளது.
சில முக்கிய வேலைகளுக்கான மாதிரி அளவு மிகவும் சிறியதாக இல்லாதபட்சத்தில், ஒவ்வொரு தொழிலின் 25வது விழுக்காட்டினர் மற்றும் 75வது விழுக்காட்டினர் சம்பளத்தை அமைச்சின் தரவு காட்டுகிறது.
75 விழுக்காடு, விமானி பயிற்றுனர்கள் $30,000 பெறுகின்றனர். 25 விழுக்காட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் $8,050 சம்பாதிக்கிறார்கள். இது மத்திம நிலை ஊதிய விகிதங்களில் பரந்த இடைவெளியைக் கொண்ட தொழிலாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“விமானி பயிற்றுவிப்பாளர்களின் சிறு பிரிவினர் மட்டுமே $20,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கின்றனர். அதிக வருமானம் ஈட்டுபவர்கள் பொதுவாக வணிக விமான விமானி பயிற்றுநர்கள், குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகள் பரந்த அனுபவம் கொண்டவர்கள்,” என்று wingsacademy.sg நிறுவனத்தின் விமானப் போக்குவரத்து ஆலோசகரான திரு ஃபேபியன் லிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
பெரிய நிறுவனங்களில் உள்ள விற்பனையாளர்கள், நிர்வாக ஆலோசகர்கள், நிறுவன இயக்குநர்கள் சிறிய நிறுவனங்களில் அத்தகைய பதவிகளில் உள்ளவர்களைவிட அதிக சம்பளம் பெறுகின்றனர்.
ஆனால், பொது மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்,நிதி அபாயங்களை பகுப்பாய்வு செய்து நிர்வகிக்கும் செயற்பாட்டாளர்கள் போன்ற சில பொறுப்புகளில் இருப்பவர்கள், 200க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய நிறுவனங்களில் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
மனிதவள அமைச்சு தரவுகளின்படி, குறிப்பிடத்தக்க பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளி இன்னும் சில தொழில்களில் நீடிக்கிறது.
ஆண் பொருளியல் வல்லுநர்கள், மனிதவள ஆலோசகர்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப தர உறுதி நிபுணர்களுக்கான சராசரி சம்பளம் அவர்களின் பெண் சகாக்களை விட மிக அதிகம்.
மாறாக, பெண் பாதுகாப்பு செயல்பாட்டு வல்லுநர்கள், சுற்றுலாத் துறை மேலாளர்கள், அழகுக் கலை வல்லுநர்கள் தங்கள் ஆண் சகாக்களைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.
ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட மனிதவள அமைச்சு வேறோர் அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் முழுநேர குடியிருப்பாளர்களின் சராசரி ஊதியம், முதலாளிகளின் மத்திய சேமநிதி பங்களிப்பு தவிர்த்து $4,860 ஆக இருந்தது. அரசாங்க ஊழியர்கள் அந்தத் தரவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.