சிங்கப்பூரில் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டுவரும் வேளையில், அவற்றை அடுத்த கட்டத்துக்குஎப்படிக் கொண்டு செல்வது என்பதில் இப்போது கவனம் திரும்பியுள்ளது என்று மக்கள் செயல் கட்சி (மசெக) மகளிர் பிரிவுத் தலைவர் சிம் ஆன் கூறியுள்ளார்.
மசெகவின் மகளிர் பிரிவும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசும் (என்டியுசி) நடத்திய கருத்தாய்வைப் பற்றி அவர் பேசினார். அந்த மகளிர் பிரிவு, பெண்கள் தொடர்பான விவகாரங்களுக்கு அறிவுரை வழங்கும் மசெக பிரிவாகும்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை வழங்குமாறு தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு முழு அனுமதி வழங்கப்பட்டன அல்லது சில மாற்றங்களுடன் அனுமதிக்கப்பட்டதாக கருத்தாய்வில் பங்கேற்றோரில் 10ல் ஒன்பது பேர் தெரிவித்தனர்.
மொத்தம் 1,500 ஆண்களும் பெண்களும் கருத்தாய்வில் பங்கேற்றனர். அவர்களில் நால்வரில் மூவர், தங்களின் வேலையிடங்கள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைச் செய்து தருவதாகத் தெரிவித்தனர்.
எனினும், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் தொடர்பில் தவறான கருத்து இன்னமும் இருப்பதே அவற்றைச் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளத் தாங்கள் தயங்குவதற்கான முக்கியக் காரணம் என்று மூன்றில் ஒரு பங்கு பங்கேற்பாளர்கள் கூறினர்.
அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி மசெக மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் ஒன் ஃபேரர் ஹோட்டலில் சனிக்கிழமை (மார்ச் 7) நடந்த நிகழ்ச்சியில் கருத்தாய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்போதும் அவற்றை வழங்குமாறு கேட்டுக்கொள்வதில் தயக்கம் இன்னமும் தொடர்வதாக மசெக மகளிர் பிரிவின் ஆய்வுப் பிரிவுத் தலைவரும் என்டியுசி தலைமைச் செயலாளரும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான இயோ வான் லிங் குறிப்பிட்டார்.
“மக்களைப் பாதுகாக்கத் தேவையான சட்டங்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்களுக்கும் நாங்கள் ஒப்புதல் வழங்கிவிட்டோம். அப்படியிருந்தும் பாதுகாப்பான பணி கலாசாரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை,” என்று இந்த விவகாரத்துக்கான வழிமுறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் செயற்குழுவின் தலைவர்களில் ஒருவருமான திருவாட்டி இயோ விவரித்தார்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைக் கோரினால் வேலையிடத்தில் தங்களிடம் குறைகாண்பது, சக ஊழியர்களும் நிர்வாகிகளும் தங்களுக்கு ஆதரவளிக்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்பதால் தாங்கள் அவ்வாறு செய்யத் தயங்குவதாகப் பெண் ஊழியர்களும் பராமரிப்பாளர்களும் தெரிவித்துள்ளதாக திருவாட்டி இயோ குறிப்பிட்டார். கூடுதலான வேலையிடங்கள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றிவரும் வேளையில் அவற்றின் நன்மைகள் குறித்து இனி ஊழியர்களுக்கிடையே உரையாடல்கள் இடம்பெறுவது முக்கியம் என்றும் அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நடவடிக்கை, அவர்களுக்கு மட்டுமின்றி நீண்டகாலத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நன்மை அளிக்கும் என்றும் திருவாட்டி இயோ குறிப்பிட்டார்.
“இதுபோன்ற ஆக்ககரமான உரையாடல்களுக்கு வகைசெய்யும் நடைமுறைகளில் பங்கு வகிக்க எண்ணம் கொண்டுள்ளோம்,” என்று அவர் சொன்னார்.
மசெக மகளிர் பிரிவு சில கலந்துரையாடல்களை அறிமுகப்படுத்தும் என்று திருவாட்டி சிம் தமது உரையில் தெரிவித்தார். அத்தகைய கலந்துரையாடல்களையும் மற்ற நிகழ்ச்சிகளையும் நடத்த உறுப்பினர்களுக்குக் கூடுதல் கட்சி நிதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

