சிங்கப்பூரின் முதல் அதிபரான யூசோப் இஷாக்கின் துணைவியார் புவான் நூர் ஆயிஷா முகமது சலீம் காலமானார். அவருக்கு வயது 91.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷா, செவ்வாய்க் கிழமை காலை 4.28 மணிக்கு (ஏப்ரல் 22) சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் காலமானதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவின் மறைவிற்கு பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர்.
1959 முதல் 1970 வரை அதிபர் யூசோப் இஷாக்கின் பதவிக் காலம் முழுவதும் அவர் உறுதுணையாக இருந்தார்.
சிங்கப்பூர் வரலாற்றில் புதிய தேசத்தை நிர்மாணிக்கும் சவால்கள் நிறைந்த முக்கியமான காலகட்டம் அது என்று குறிப்பிட்ட அறிக்கை, அவரது அறப்பணி ஈடுபாட்டையும் பல்வேறு சமுதாயப் பணிகளுக்கு தலைமை ஏற்று இருந்ததையும் சுட்டிக்காட்டியது.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், வசதி குறைந்தோர் ஆகியோருக்கு புவான் நூர் ஆயிஷா ஆதரவுக் குரல் கொடுத்தார்.
அவருடைய கருணை, தன்னடக்கம், அளப்பறிய அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை எல்லாத் தரப்பு சிங்கப்பூரர்களின் மரியாதைக்குப் பாத்திரமானது. இன்று வரை அவர் நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவர், ஆற்றிய பங்களிப்புக்கு தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், 1971ஆம் ஆண்டில் அவருக்கு சிறப்புக் கௌரவப் பதக்கத்தை வழங்கி சிறப்பித்தது.
அவருடைய பங்களிப்பின்பேரில் அரசாங்கம், அவரது குடும்பத்திற்கு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளில் துணை புரியும் என்று பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவின் நல்லுடல் கிராஞ்சி அரசு இடுகாட்டில் இன்று பின்னேரத்தில், காலஞ்சென்ற அதிபர் யூசோப் இஷாக்கின் அருகில் அடக்கம் செய்யப்படும்.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவின் நல்லுடல் சடங்குபூர்வ பீரங்கி வாகனத்தில் ஏற்றப்பட்டு பால்வி பள்ளிவாசலிலிருந்து கிராஞ்சி அரசு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அரசாங்கம் அவருக்கு உயரிய மரியாதையை வழங்கிச் சிறப்பிக்கும்.