மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின்கீழ் செயல்படும் பூங்காக்களுக்குச் செல்வோர், அங்கு நடக்கும்போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருள்கள் உள்ளிட்ட உடைமைகளை அவர்கள் பைக்குள் பத்திரமாக வைத்துக்கொள்வதோடு அரியவகைக் குரங்குகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று வனவிலங்குக் குழுமம் தெரிவித்தது. குரங்குகளின் கண்களை நேருக்கு நேராய் நோக்குவதைப் பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும். குரங்குகளால் அண்ட முடியாத குப்பைத்தொட்டிகள் பூங்காக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. குப்பைகளைப் போடுவதற்குப் பார்வையாளர்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குழுமம் கேட்டுக்கொண்டது.
ஊடகங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு வனவிலங்குக் குழுமம் பதில் தந்தது.
ஆடவர் ஒருவர் அரியவகைக் குரங்கை நோக்கிப் பையை வீசும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து குழுமத்தின் கருத்து வந்துள்ளது.
சம்பவம் சிங்கப்பூர் வனவிலங்குத் தோட்டத்தில் நடந்ததாகத் காணொளியில் தெரியவருகிறது. மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின்கீழ் அது இயங்குகிறது.
வியாழக்கிழமை (அக்டோபர் 2) நிலவரப்படி ஏறக்குறைய 109,000 முறை காணொளி பார்க்கப்பட்டுள்ளது. அதன் தொடர்பில் 600க்கும் மேற்பட்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
டிக்டாக்கைப் பயன்படுத்தும் ஆரன்டோம்பால் என்பவர் செப்டம்பர் 28 அன்று காணொளியைப் பதிவிட்டிருந்தார். ஆடவர், அவரின் பிள்ளையினுடைய உணவைக் குரங்கு எடுத்துச்சென்றதால் சினமுற்றதாகக் காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குரங்கொன்று வாயில் ஒருவகை ரொட்டியை எடுத்துக்கொண்டு கம்பி வேலியில் ஏறுவதைக் காணொளியில் காணமுடிகிறது. பிள்ளை அதைப் பார்க்கிறது. அப்போது அங்கு வந்த ஆடவர், நீல நிறப் பையைக் குரங்கை நோக்கி வேகமாக அசைக்கிறார். அது விலங்கின் மீது படாமல் பிள்ளையின் முகத்தைத் தாக்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
காணொளியைப் பார்த்த சிலர் ஆடவரின் செய்கையைக் குறைகூறினர். விலங்குத் தோட்டத்திற்குள் பிள்ளை உண்பதற்கு அவர் அனுமதித்ததும் தவறு என்றனர் இணையவாசிகள். ஆனால் வேறுசிலரோ, பிள்ளையைத் தற்காக்கும் உரிமை ஆடவருக்கு உண்டு என்று தெரிவித்தனர்.
பார்வையாளர்கள் விலங்குகளைக் கடந்துசெல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள் பூங்காக்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் இடம்பெற்றிருப்பதாகக் குழுமத்தின் பேச்சாளர் கூறினார். பார்வையாளர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு நல்ல விதமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புவதாக அவர் சொன்னார். எதிர்மறையான தொடர்புகளைக் குறைக்கப் பூங்காக்களில் இருக்கும் வழிகாட்டிகள் உதவுவர் என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார்.