வரும் பொதுத் தேர்தலை நேர்மையான முறையில் சந்திக்க விரும்புவதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் டான் செங் போக் கூறியுள்ளார்.
கியட் ஹோங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) தொகுதிச் சுற்றுலா மேற்கொண்ட டாக்டர் டான் ஊடகங்களிடம் பேசினார்.
“சிங்கப்பூரில் மேற்கொள்ளக்கூடாத தந்திர உத்திகளை நாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை. முரட்டுத்தனமான அல்லது வேண்டத் தகாத வேறு எந்தவிதமான நடத்தையிலும் ஈடுபட வேண்டாம்,” என்று அவர் கூறினார்.
சுவா சூ காங் குழுத்தொகுதியைச் சேர்ந்த புக்கிட் கோம்பாக்கில் ஜனவரி 4ஆம் தேதி நடந்த தொகுதிச் சுற்றுலாவில் பிஎஸ்பி தொண்டர்களுக்கும் மக்கள் செயல் கட்சி (மசெக) தொண்டர்களுக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து டாக்டர் டான் பேசினார்.
இரு தரப்பும், மற்றத் தரப்பு துன்புறுத்தியதாகக் கூறியது. நடந்தது குறித்து மாறுபட்ட வாதங்களை முன்வைத்துள்ளன.
அதற்கடுத்த வாரம் “சிங்கப்பூரில் அரசியல் நடவடிக்கைகளின் வன்முறைக்கு இடமில்லை” என்று டாக்டர் டான், சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லோ யென் லிங் இருவரும் சமூக ஊடகப் பதிவுகளில் கூறினர்.
பிஎஸ்பி தொண்டூழியர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடந்து வருகிறது.
டாக்டர் டான், மற்ற பிஎஸ்பி தலைவர்கள், தொண்டூழியர்கள் பலரும் கியட் ஹோங் உணவு மையம், சந்தையில் சுற்றுலா மேற்கொண்டனர். குடியிருப்பாளர்களுடன் உரையாடி செய்திக் கடிதங்களை வழங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
“கட்சி பண்புடன் நடந்துகொள்வது முக்கியம். இங்குள்ள எனது மக்கள் அனைவரும் பண்புடன் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து தெளிவுபடுத்தட்டும்,” என்று அவர் கூறினார்.
பிஎஸ்பி வன்முறையை அனுமதிக்காது. கட்சித் தொண்டூழியர் எவராவது வன்முறையாக செயல்பட்டால் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவர்கள் மீது பொய்க் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அதை எதிர்த்து கட்சி போராடும் என்று ஜனவரி 10ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் டான் குறிப்பிட்டிருந்தார்.
அதேநாளில் தமது ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் டானின் கருத்தை ஒத்துக்கொள்வதாகக் கூறிய வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர் மூத்த துணை அமைச்சர் திருவாட்டி லோ, அரசியல் நடவடிக்கைகளில் வன்முறைக்கு இடமில்லை என்றார். கட்சி இந்த விவகாரத்தை காவல்துறையிடம் விட்டுவிடும் என்றார் அவர்.
மக்களை ஈடுபடுத்தி வாக்குகளைச் சம்பாதிக்க கட்சி விரும்புகிறது என்றார் டாக்டர் டான்.
பிஎஸ்பி 2020ஆம் ஆண்டில் அதன் முதல் தேர்தலில் சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிட்டது. கட்சி புதியது என்றாலும் 84 வயதான டாக்டர் டான் அப்பகுதிவாசிகள் பலருக்கு அந்நியர் அல்ல.
லிம் சூ காங், அமா கெங் என்ற இடத்தில் மருந்தகம் நடத்தி வந்த டாக்டர் டான், வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஆயர் ராஜா தனித்தொகுதியில் 1980 முதல் 2006 வரை மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றியவர்.
அவர் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாவில், “எனது வயதான வாடிக்கையாளர்களை இங்கு சந்தித்தேன். அமா கெங்கைச் சேர்ந்த ஒரு மக்கள் குழுவைச் சந்தித்தேன்.
அரசியல் கட்சிகளுக்கு இடையிலான வன்முறை கடந்த காலமாக மாறும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
“பழைய நாட்களில், மிகவும் பயங்கரமான சம்பவங்களை எதிர்கொண்டோம். அதற்கு மிகவும் பழக்கப்பட்டுள்ளோம். ஆனால் அந்த நேரத்தில், நாங்கள் அதைத் தவிர்க்க விரும்பினோம். சிங்கப்பூரில் அந்த வகையான நடத்தை (இப்போது) எங்களிடம் இருக்கக்கூடாது,” என்றார் அவர்.