பாசிர் பாஞ்சாங்கில் உள்ள விண்ட்சர் சுகாதாரப் பராமரிப்பு இல்லத்தின் (Windsor Convalescent Home) உரிமம் வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மீட்டுக்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இல்லத்தில் வசிப்பவர்களின் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் மோசமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லத்தில் தங்கியபடி பராமரிப்புச் சேவைகளைப் பெறுவோரை மற்ற தாதிமை இல்லங்களுக்கு மாற்ற நான்கு மாத அவகாசம் தரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வியாழக்கிழமை (ஜூன் 18) அறிக்கை மூலம் தெரிவித்தது.
அந்தக் காலகட்டத்தில் இல்லத்தில் வசிப்பவர்கள் தொடர்ந்து சரியான பராமரிப்புச் சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய இடைக்காலப் பராமரிப்புச் சேவைக் குழு ஒன்று விண்ட்சர் இல்லத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
45 படுக்கைகளைக் கொண்ட தாதிமை இல்லத்தை நடத்த விண்ட்சருக்குத் தற்போது உரிமம் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் இல்லவாசிகளின் பாதுகாப்பு, பராமரிப்புச் சேவைகள் உள்ளிட்ட அம்சங்களில் மோசமான முறைகேடுகள் அடிக்கடி நிகழ்ந்திருப்பது தெரியவந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இல்லத்தை நடத்துவோர் சரியாக நிர்வாகம் செய்யாததோடு கவனமின்றி நடந்துகொண்டு போதுமான கட்டுப்பாடுகளை விதிக்காதது பிரச்சினையை மோசமாக்கியதாக அமைச்சு குறிப்பிட்டது.

