ஆர்ச்சர்ட் ரோடு அருகே ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை சாலையைக் கடக்கும்போது காரில் மோதிய 26 வயது மாது சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
‘சிங்கப்பூர் இன்சிடன்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், பாரகான் கடைத்தொகுதியை அடுத்துள்ள பைட்ஃபோர்ட் ரோட்டின் வலக்கோடி தடத்தில் கார் சென்று கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
அக்கடைத்தொகுதியையும் அல்-ஃபலா மசூதியையும் இணைக்கும் மேம்பாலத்தை கார் நெருங்கும்போது, ஒரு மாது வேகமாக சாலையைக் கடக்க முயல்கிறார். நடுத் தடத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி பிரேக் போடுகிறது. பின்னர் அந்த மாது காரால் மோதப்பட்டு, சாலையில் சென்று விழுகிறார்.
விபத்து குறித்து ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
26 வயது பெண் பாதசாரி ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
43 வயதான ஆண் கார் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
சாலையைக் கடக்கும்போது ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளும் பாதசாரிகள் சம்பந்தப்பட்ட ஆக அண்மைய விபத்து இது.