ஈரச்சந்தையிலும் உணவு நிலையத்திலும் தொடர்ச்சியாக நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 70 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஈசூன் ரிங் ரோட்டில் நபர்களின் மூடப்படாத பைகளில் இருந்து பணப்பைகளை எடுத்து, அவற்றில் இருக்கும் பணத்தையும் எடுத்த பிறகு அப்பணப்பைகளை அந்த மாது அந்தப் பகுதியில் அப்புறப்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை அறிக்கை கூறியது.
ஈசூன் ரிங் ரோடு வட்டாரத்தில் தங்களின் பணப்பையைக் காணவில்லை என்று 2023ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜூன் 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறைக்குப் பலரிடமிருந்து புகார்கள் வந்தன.
சிசிடிவி, காவல்துறை கேமராக்கள் மூலம் கிடைத்த படங்களின் வாயிலாகவும் விசாரணைகள் வாயிலாகவும் உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் அம்மாதை அடையாளம் கண்டு, ஜூன் 15ஆம் தேதி கைது செய்தனர்.
இதே போன்ற வேறு குற்றங்களிலும் கைதானவருக்குப் பங்குண்டு என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
திருட்டு தொடர்பாக ஜூன் 17ஆம் தேதி மாது மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
இத்தகைய குற்றத்திற்கு மூவாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், பொதுமக்கள் தங்களின் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.