ஈசூனில் சனிக்கிழமை (ஜூன் 1) பிற்பகல் கார் ஒன்று கூரையுடன் கூடிய நடைபாதையில் மோதிய விபத்தில், அந்த காரில் இருந்த 74 வயது மாது ஒருவர் உயிரிழந்தார்.
புளோக் 820 ஈசூன் ஸ்திரீட் 81க்கு அருகே பிற்பகல் 3.45 மணியளவில் அந்த கார் சறுக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட அந்த கார், நடைபாதையின் தூண் மீது மோதியதைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்கள் காட்டின.
விபத்தின் காரணமாக அந்த காரின் முன் இடதுப் பகுதி மோசமாகச் சேதமுற்றது.
கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 76 வயது ஆண் ஓட்டுநரும் 74 வயது பெண் பயணியும் சுயநினைவுடன் இல்லை எனக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
அந்த மாது பின்னர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகக் காவல்துறை கூறியது. அந்த ஆடவர் இன்னும் மருத்துவமனையில் உள்ளார்.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.