கல்வி அமைச்சின் பாலர் பள்ளியில் சென்ற ஆண்டு (2024) ஜூலை மாதம் ஒரே நாளில் சிறுவர்கள் மூவரைத் துன்புறுத்தியதாக மாது ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐந்து வயது நிரம்பிய அக்குழந்தைகளைத் துன்புறுத்தியதன் தொடர்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11), அந்தப் பெண் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரரான அந்த 34 வயதுப் பெண், பெயர் குறிப்பிடப்படாத வெளிப்புற வர்த்தக நிறுவனம் சார்பில் அந்தப் பள்ளியில் பணியாற்றியதாகக் கூறப்பட்டது. அந்த மாது பற்றியோ பாலர் பள்ளி அமைந்திருக்கும் இடம் குறித்தோ மேல்விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.
2024ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அவர், ஒரு குழந்தையைக் கையைப் பிடித்து இழுத்து, சுவரை நோக்கித் தள்ளியதாகக் கூறப்பட்டது. அதனால் அச்சிறுவன் கீழே விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு சிறுவனிடமும் சிறுமியிடமும் அவர் அதேபோல் நடந்துகொண்டதாகவும் அச்சிறுமியை நின்றுகொண்டே உணவருந்தச் செய்ததாகவும் தெரிகிறது. அந்தப் பெண் அக்டோபர் 28ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய மாதங்களில் வேறு சில சம்பவங்களில், பிள்ளைகளைத் துன்புறுத்தியதன் தொடர்பில் பாலர் பள்ளி ஆசிரியர்கள் சிலருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.