அண்மையில் போலி ஆர்டர்களால் சில உள்ளூர் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டன.
சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்தவர் என்று மர்ம நபர்கள் ஆள்மாறாட்டம் செய்து மலர்கள், உணவுப்பொருள்கள் போன்றவற்றைப் பேரளவில் ஆர்டர் செய்தனர்.
அவற்றுக்கான முன்பணம் கொடுக்கப்படவில்லை.
இறுதியில் அப்பொருள்களை யாரும் வாங்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட உள்ளூர் வர்த்தகங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்த மோசடியுடன் தொடர்புடையவர் என்று இலங்கையைச் சேர்ந்த பெண் மீது புதன்கிழமை (செப்டம்பர் 17) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
22 வயது ராஜாத்தி ராஜசிங்க மனமேந்திரா பட்டாபிலாகே விஷ்வ மாதவி என்னும் அந்தப் பெண், மத்தியக் காவல்துறைப் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கணினியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் தமது வங்கிக் கணக்கை முறையற்ற காரியங்களுக்காக மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டை ராஜாத்தி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவரது வங்கிக் கணக்கில் பேரளவிலான பணம் போடப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் அக்டோபர் 1ஆம் தேதியன்று குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணினியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல்முறையாக இக்குற்றத்தைப் புரிந்தவர் என்கிற அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்படலாம்.
இக்குற்றத்தைத் தொடர்ந்து புரிபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்தப் போலி ஆர்டர் மோசடி தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்தது.
செப்டம்பர் 4ஆம் தேதியிலிருந்து இந்த மோசடி தொடர்பாகக் குறைந்தது ஐந்து வழக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
செப்டம்பர் 15, 16ஆம் தேதிகளில் மிடல் சாலை, உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 81, கென்டோன்மண்ட் சாலை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் மூவரும் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இக்குற்றங்களால் உள்ளூர் வர்த்தகங்களுக்கு குறைந்தது $32,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கையின்போது பல மின்னணுவியல் சாதனங்களும் சிம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடிக் கும்பலின் உத்தரவின்கீழ் இந்த மூவரும் குற்றச் செயல்களைப் புரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.