பணிப்பெண்ணின் காதைப் பிடித்து இழுத்து முறுக்கியதாக மாது மீது புகார்

1 mins read
c91eab9b-7e6f-485e-98c7-1bc5df2bfe0e
வெவ்வேறு சம்பவங்களில் பணிப்பெண் மீது பொருள்களை மாது எரிந்ததாகவும் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இல்லப் பணிப்பெண்ணின் வலது காதைப் பிடித்து இழுத்து திருகியதோடு, அவர் மீது பல்வேறு சம்பவங்களில் குப்பைகளையும் தண்ணீரையும் வெட்டிவைத்த மிளகாய்களையும் வீசியதாக மாது ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (நவம்பர் 25) அன்று நூர்வஹிடா ஜோஹாரி என்ற அந்த மாது மீது பணிப் பெண்ணைத் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மலேசியரான 41 வயது நூர்வஹிடா ஜோஹாரி, சிங்கப்பூர் நிரந்தரவாசியாவார். புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவன்யூ 8ல் உள்ள தனது வீவக வீட்டில் 2023ஆம் ஆண்டில் அவர் அந்தக் குற்றச் செயல்களைப் புரிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் அவர் குப்பைகள் நிறைந்த கூடையை பணிப்பெண் முகத்தின் மீது வீசியதாகச் சொல்லப்பட்டது. இதற்கு அடுத்த மாதம் மற்றொரு சம்பவத்தில் தண்ணீர்க் குவளை, மாவு வைக்கப்பட்டிருந்த குவளை, மிளகாய் வெட்டி வைக்கப்பட்டிருந்த குவளை ஆகியவற்றை பணிப் பெண்மீது வீசியதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பரில் வெவ்வேறு சம்பங்களில் காலணிகளையும் பணிப் பெண்மீது அவர் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றுக்கு மேலாக 2023 அக்டோபரில் நூர்வஹிடா, பணிப்பெண்ணின் காதை இழுத்து திருகியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2025 பிப்ரவரி 5ஆம் தேதி அவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணிப்பெண்ணைத் தாக்கியது நிரூபணமானால் அவருக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்