விபத்து: பழியை ஏற்று குற்றம் புரிந்ததை மாது ஒப்புக்கொண்டார்

1 mins read
af818740-bacd-4ad9-827e-bb659e454a01
நீதியைத் தடுக்கும் நோக்கில் குற்றம் இழைத்ததாக ஆண், பெண் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது - கோப்புப் படம்: ஊடகம்

தமது நண்பர் செய்த விபத்தைத் தாம் செய்ததாகப் பழியை ஏற்றுக்கொண்டு குற்றமிழைத்ததை 31 வயதுப் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சின் வெய் யீங் எனப்படும் அவரும் அவரது நண்பர் யுவென் ஸெங் வென், 36, என்பவரும் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இரவு மது அருந்திய பின்னர் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர். யுவென் மூன்று அல்லது நான்கு குவளை ஒயின் அருந்திய நிலையில், சின் ஒரு குவளை அருந்தி இருந்தார்.

வாகனத்தை யுவென் ஓட்டினார். இரவு 10.35 மணியளவில் மோல்மீன் ரோட்டில் இருந்து மத்திய விரைவுச் சாலைக்குத் திரும்பியபோது அவர் தமது கட்டுப்பாட்டை இழந்தார். அதனால், சாலையோரத் தடுப்பில் ஏறிய வாகனம் போக்குவரத்து விளக்குக் கம்பத்தின் மீது மோதியது.

உடனே, ஓட்டுநர் இருக்கைக்குத் தாம் மாறிக்கொள்வதாக சின் கூறியதும் அதனை யுவென் ஏற்றுக்கொண்டார். அப்போது இரண்டு போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

தாம் வாகனத்தை ஓட்டியதாகவும் ஒரே ஒரு குவளை ஒயின் மட்டும் தாம் அருந்தி இருந்ததாகவும் காவல்துறை அதிகாரியிடம் சின் பொய் கூறினார்.

நீதியைத் தடுக்கும் நோக்கில் குற்றம் இழைத்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கும் மே 16ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்