பிள்ளைகள்மீது வெந்நீரை ஊற்றிய தாய்

பிள்ளைகள்மீது வெந்நீரை ஊற்றிய தாய்

2 mins read
c0b8efc2-ef14-47e0-b4e2-ac5a18963e5c
மாதிரிப்படம்: - பிக்சாபே

தன் பிள்ளைகள் நால்வரில் ஒருவர் பணத்தைத் திருடியதாகச் சந்தேகப்பட்ட பெண் ஒருவர், அவர்கள்மீது வெந்நீரை ஊற்றினார்.

தமது குற்றத்தை திங்கட்கிழமையன்று (ஜூன் 24) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் அந்த 33 வயது தாய்.

அக்குழந்தைகளில் மூன்று பெண் குழந்தைகள்.

தன் மகள்களுக்கு எட்டு, 10 மற்றும் 11 வயதானபோதும் மகனுக்கு ஒன்பது வயதானபோதும் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

குளித்துவிட்டு இஸ்லாமிய சமயப் பள்ளிக்குச் (மதரசா) செல்வதற்காக கடந்த 2022 ஜூலை 2ஆம் தேதி தம் பிள்ளைகளை அவர் எழுப்பியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் டின் ஷு மின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தன் பணப்பையிலிருந்து 20 வெள்ளியை எடுத்துச் சென்று, காலை உணவிற்காக ரொட்டி வாங்கி வரும்படி தன் மூத்த மகளிடம் அவர் சொன்னார். ஆனால், பணப்பையில் ஐந்து வெள்ளிதான் இருப்பதாக அவள் கூறினார். ஆனால், தன் பணப்பையில் 60 வெள்ளி இருந்ததாக நினைத்த அந்தத் தாய், தன் பிள்ளைகளில் ஒருவர்தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் எனச் சந்தேகப்பட்டார்.

பின்னர் பணத்தைத் தேடும்படி தன் பிள்ளைகளிடம் கூறிய அவர், அவர்களைக் கவனித்ததுடன், பணத்தைக் கண்டுபிடிக்கத் தவறினால் அவர்கள்மீது வெந்நீரை ஊற்றிவிடுவதாக மிரட்டினார்.

பின்னர் சமையலறைக்குச் சென்ற அவர், தண்ணீரைச் சுடவைத்து, ஒரு குவளையில் எடுத்து வந்தார். படுக்கையறைக்குச் சென்ற அவர், அங்கு பணத்தைத் தேடிக்கொண்டிருந்த தன் பிள்ளைகள்மீது வெந்நீரை ஊற்றினார்.

பணத்தை எடுக்கவில்லை என்று பிள்ளைகள் அழுது அலறியபோதும் மனமிரங்காத அப்பெண், ஒவ்வொருவர்மீதும் நான்குமுறை வெந்நீரை ஊற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர்களைக் குளிக்க வைத்த அப்பெண், அவர்களின் உடலில் தீக்காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டார். பின்னர் அழுதபடியே அக்காயங்களுக்கு அவர் மருந்திட்டார்.

அதன்பின் தன் மூத்த சகோதரியைத் தொடர்புகொண்டு அவரை வீட்டிற்கு அழைத்தார் அப்பெண். பிறகு அவசர மருத்துவ வாகனமும் அழைக்கப்பட்டது.

இவ்வழக்கில் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்கப்படும்.

தன் பராமரிப்பில் உள்ள குழந்தையை மோசமாக நடத்தும் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் எட்டாண்டுகள்வரை சிறை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்