ரோசோர் வட்டாரத்தில் உள்ள ஷார்ட் ஸ்திரீட்டில் இருக்கும் திறந்தவெளித் திடலில் இல்லப் பணிப்பெண் ஒருவருக்கு சுற்றுப்பயணி பாலியல் வன்கொடுமை இழைத்ததாக நம்பப்படுகிறது.
அதற்கு சில நிமிடங்கள் கழித்து பாதிக்கப்பட்ட 32 வயது பெண்ணுக்கு மற்றோர் ஆடவரும் பாலியல் வன்கொடுமை இழைத்தார்.
இச்சம்பவம் 2024ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி நிகழ்ந்தது. பிலிப்பீன்சைச் சேர்ந்த அந்தப் பணிப்பெண், முதலில் நிகழ்ந்ததாக நம்பப்படும் சம்பவத்துக்குப் பிறகு ஹார்வின் வேளாங்கனி என்பவரைப் பார்த்திருக்கிறார்.
தனக்கு நடந்ததைப் பற்றி அவரிடம் கூறியிருக்கிறார். உதவுவதற்குப் பதிலாக அந்த 24 வயது மலேசிய ஆடவர், அப்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்தார்.
சம்பவம், ரோசோர் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே மங்கலான விளக்குகள் உள்ள பகுதியில் நிகழ்ந்தது. பிறகு ஆடவர் பெண்ணின் பையில் உள்ள பொருள்களைக் கலைத்து அவரிடமிருந்து 368 ரிங்கிட் (120 வெள்ளி) தொகையைத் திருடியிருக்கிறார்.
ஒருவழியாக பாதிக்கப்பட்ட பெண் ஹோட்டல் மி ரோசோரில் வேலை செய்த ஒருவரிடமிருந்து உதவி பெற்றார். அந்த ஹோட்டல் ஊழியர் காவல்துறையை அழைத்தார்.
குற்றவாளியான ஹார்வின், சிங்கப்பூரில் கூலித்தொழில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதித்தது. தீர்ப்பளிக்கும்போது திருடியதாக ஒரு குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட அனுமதி இல்லை.
சம்பவம் நிகழ்ந்த திடல் ஒரு காற்பந்துத் திடலைவிடப் பெரியது. அது, ரோசோர் எம்ஆர்டி நிலையத்தின் இரு கட்டடப் பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளது.
லசால் கலைக் கல்லூரி, ஹோட்டல் மி ரோசோர், சிம் லிம் ஸ்குவேர் ஆகியவற்றுக்கு நடுவே திடல் இருக்கிறது.
சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண் அதிக அளவில் மதுபானம் அருந்தியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அன்று மாலை, இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணியான அன்பழகன் சிவமுருகன் என்பவர் முதலில் பணிப்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக நம்பப்படுகிறது.
அன்பழகனின் வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

