அப்பர் சிராங்கூன் கடைத்தொகுதியில் இருவரைக் கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் 44 வயது பெண்ணைக் காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) கைதுசெய்துள்ளனர்.
பிற்பகல் 12.20 மணியளவில் அப்பர் சிராங்கூன் கடைத்தொகுதியில் உதவி தேவை என அழைப்பு வந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
வேறோர் இரண்டு பெண்களைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் பெண்ணைப் பொதுமக்கள் தடுத்து மடக்கினர்.
ஆபத்தான ஆயுதம் மூலம் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முற்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் பெண்ணைக் கைதுசெய்தனர்.
அந்தப் பெண் மனநல சிகிச்சைக்கும் அனுப்பிவைக்கப்படுவார்.
கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் பெண் தனியாக அவ்வாறு செய்ததாகத் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 36 வயதுப் பெண்ணும் 44 வயதுப் பெண்ணும் காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து அதிகாரிகள் கத்தி ஒன்றைப் பறிமுதல் செய்தனர்.

