வெஸ்ட் கோஸ்ட் வே வட்டாரத்தில் அமைந்துள்ள கொண்டோமினிய (கூட்டுரிமை) வீட்டில் $94,900க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இத்தகவலை வெளியிட்ட மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, இதன்தொடர்பில், 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சனிக்கிழமை (ஜனவரி 10) அன்று தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் ஏறத்தாழ 1,110 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தக்கூடிய சுமார் 7,144 கிராம் கஞ்சா உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
இதற்கிடையே, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது, அதிகாரிகளை அறைக்குள் அனுமதிப்பது சார்ந்த சட்டப்பூர்வ உத்தரவுகளுக்கு அந்தப் பெண் இணங்க மறுத்ததால், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் வலுக்கட்டாயமாக அந்த இடத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது.
அறையைச் சோதனையிட்ட அதிகாரிகள் சுமார் 7,144 கிராம் கஞ்சா, 169 கிராம் ‘ஐஸ்’, 9 கிராம் கெட்டமைன், 30 கிராம் எக்ஸ்டசி, 30 ‘எரிமின்-5’ மாத்திரைகள், இவற்றுடன் போதைப்பொருள் பயன்பாட்டுக் கருவிகளையும் மீட்டனர்.
வெஸ்ட் கோஸ்ட் வேயில் உள்ள ஒரு கொண்டோமினிய வீட்டின் அறையில் கைது செய்யப்பட்ட அந்தச் சந்தேக நபர்மீதான விசாரணைகள் தொடர்கின்றன.
சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படலாம்.

