கிளமெண்டி அவென்யூ 3, வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 441Aல் 56 வயது மாது ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
அச்சம்பவம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) காலை நிகழ்ந்தது. அந்த மாது புளோக்கின்கீழ் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாக மதர்ஷிப் ஊடகத்தின் கேள்விகளுக்குக் காவல்துறை பதிலளித்தது.
கடைகளுக்கு அருகே உள்ள சம்பவ இடத்தைக் காவல்துறை உடனடியாகப் பொதுமக்களுக்கு மூடியதாக 8வோர்ல்ட் தெரிவித்தது. வெள்ளிக்கிழமை காலை 10.50 மணியளவில் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.
மாது உயிரிழந்ததை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினார்.
இந்த மரணத்தில் சூது எதுவும் இருந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 18 வயது பதின்ம வயது நபர் ஒருவர் கிளமெண்டி அவென்யூ 3, புளோக் 441Bல் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

