தகாத வார்த்தைகள் கொண்ட செய்திகளை வாட்ஸ்ஆப் செயலில் பதிவிட்டதோடு, காவல்துறை அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்த மாதின்மீது வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இயோ யுவான் ஷுவான் என்ற அந்த மாதின்மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் காவல்துறை அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி 999 என்ற எண்ணில் காவல்துறை அதிகாரியுடன் உரையாடியபோது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒரு குற்றச்சாட்டும் மாதின்மீது உள்ளது.
மார்ச் 17ஆம் தேதி அடையாளம் தெரியாத ஃபேஸ்புக் குழுவில் வெளிவந்த பதிவொன்றில் தகாத வார்த்தைகள் கலந்த உரையாடல் குறித்து காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் பதிவில் காவல்துறை அதிகாரிபோல் மாது பாவனை செய்து, ஒருவரை மிரட்டியுள்ளார்.
அந்த மாது ஜனவரி 26ஆம் தேதியும் மார்ச் 16ஆம் தேதியும் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி போலக் காட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு மாதின் அடையாளம் கண்டறியப்பட்டு மார்ச் 19ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 20 அன்று, அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாதை மனநலக் கழகத்தில் காவலில் வைப்பதற்கு விண்ணப்பித்தார். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
இந்த வழக்கு ஏப்ரல் 2ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்க அதிகாரிபோல ஆள்மாறாட்டம் செய்வோருக்கு இரண்டு ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
பொது அதிகாரிகள்மீது தகாத வார்த்தைகள் பயன்படுத்தியோருக்கு 12 மாத சிறை, அபராதம் அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

