மனிதக் கழிவை வீசி இடையூறு; 63 வயதுப் பெண்மீது குற்றச்சாட்டு

2 mins read
c2a6f024-0417-4fee-bd3d-e59395dbc615
மனிதக் கழிவுகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை வீசிப் பொது இடையூறு விளைவித்தாக 63 வயது பெண் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. - கோப்புப் படம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புச் சுவரின்மீது மனிதக் கழிவைப் பலமுறை வீசியதாகப் பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மார்சிலிங் ரைஸ் வட்டாரம்  புளோக் 131ல் அமைந்துள்ள 10வது மாடிச் சுவரில் ஐந்து முறை மனிதக் கழிவை வீசிய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அந்தப் பெண்ணின் பெயர் வியோனா டியோ கீ லியோக், 63.

சிங்கப்பூரரான அவர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் தொடங்கி, வீவக வீட்டின் சுவர்ப் பகுதியில் மனிதக் கழிவை வீசத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பொது மக்களுக்குத் தொல்லை கொடுத்ததாக ஏழு குற்றச்சாட்டுகள் வியாழக்கிழமை (ஜனவரி 15) அவர்மீது சுமத்தப்பட்டன.

இதன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, மார்சிலிங் ரைஸ் புளோக் 131ல் முதல் முறையாக கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அதிகாலை 4.25 மணிவாக்கில் ஆடவர் ஒருவருக்கு எரிச்சலூட்டும் வகையில் அவர் இச்செயலைப் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில், அவர் காலை 8 மணி மற்றும் 9 மணிக்கு மேல் மனிதக் கழிவை வீசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்முறை உணவுக் கழிவுகளை வீசிய குற்றச்சாட்டையும் அந்தப் பெண் எதிர்நோக்குகிறார். இத்தகைய சம்பவம் ஆகக்கடைசியாக, திங்கட்கிழமை நிகழ்ந்ததாகவும் குற்றப்பத்திரிகை விவரித்தது.

இவ்வழக்கு தொடர்பில், நீதிமன்றம் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

பொது இடையூறு விளைவித்தாகக் கூறப்படும் இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் S$2,000 வரை அபராதம் விதிக்கப்படக்கூடும். தொடர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், அபராதத்துடன் கூடுதலாக மூன்று மாதங்கள்வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்