சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட 18 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தங்கியதற்காக சீனாவைச் சேர்ந்த மாது ஒருவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனையும் $4,000 அபராதமும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) விதிக்கப்பட்டது.
சென் யூயிங், 54, எனும் அந்த மாது, குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவரது சிறப்பு அனுமதி காலாவதியானதைத் தொடர்ந்து, 2005 நவம்பரிலிருந்து சிங்கப்பூரில் 18 ஆண்டுகள், 10 மாதங்கள், ஒரு நாள் தங்கினார்.
சென்னுக்கு 2005 நவம்பர் 2ஆம் தேதி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, 2005 நவம்பர் 23ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தங்க அவர் அனுமதிக்கப்பட்டார். அடையாளம் வெளிப்படுத்தப்படாத வழக்கு ஒன்றுக்காக அரசு தரப்பு சாட்சியாக இருக்கும்படி அவரிடம் தொடக்கத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட அவர் அதிகாரிகளிடம் முன்னிலையாகவில்லை. மாறாக, சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் அவர் தங்கிவிட்டார். இவ்வாண்டு செப்டம்பர் 24ஆம் தேதி புக்கிட் மேரா ஈஸ்ட் அக்கம்பக்க காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.
இது, சென்னின் இரண்டாவது குற்றமாகும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வேறொரு குடிநுழைவுக் குற்றத்துக்காக 2005 செப்டம்பர் 16ஆம் தேதி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
2005 செப்டம்பர் 23ஆம் தேதி சென்னுக்கு 18 வாரச் சிறைத் தண்டனையும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், காவல்துறை வழக்கு ஒன்றுக்காக அரசு தரப்பு சாட்சியாக விளங்க, 2005 அக்டோபர் 14ஆம் தேதி குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தால் அவருக்குச் சிறப்பு அனுமதி ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
அந்தச் சிறப்பு அனுமதி பலமுறை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அவர் அரசு தரப்பு சாட்சியாக இருக்க தேவையில்லாததால், 2005 நவம்பர் 23ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தங்க சென்னுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நாடு திரும்ப, குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவைக்கும் கிளைக்கு 2005 நவம்பர் 23ஆம் தேதி சென் சென்றிருக்க வேண்டும்.
ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. மாறாக, வேலை செய்து பணம் ஈட்ட சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கினார். அவர் என்ன வேலை செய்தார் என்பது பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.
தமது தண்டனைக் குறைப்பு வாதத்தில் சென் பெரிதாக எதையும் கூறவில்லை. ஆனால், தண்டனைக் குறைக்கும்படி தம் மொழிபெயர்ப்பாளர் மூலம் அவர் மாண்டரின் மொழில் கேட்டுக்கொண்டார்.
சென்னால் அபராதம் செலுத்த முடியாததால், அதற்குப் பதிலாக அவர் மேலும் எட்டு வாரங்கள் சிறையில் இருப்பார்.


