சுவா சூ காங்கில் கத்தியால் குத்தப்பட்ட பெண் மரணம்; ஆடவர் படுகாயம்

சுவா சூ காங்கில் கத்தியால் குத்தப்பட்ட பெண் மரணம்; ஆடவர் படுகாயம்

2 mins read
2570c477-deb2-4e3c-8331-7a703519bd58
சுவா சூ காங் அவென்யூ 2 புளோக் 248ல் குப்பைத் தொட்டிக்கு அருகே விழுந்துகிடந்த ஆடவர் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுவா சூ காங்கில் செவ்வாய்க்கிழமை (மே 26) நடந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஆடவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சுவா சூ காங் அவென்யூ 2, புளோக் 248, 12வது தளத்தில் இரவு 9 மணியளவில் மின்தூக்கிக்கு அருகே 21 வயது பெண் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சாவ்பாவ் வெளியிட்ட செய்தியில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

பின்னர் அதே புளோக்கிலிருந்து ஆடவர் ஒருவர் வெளியே குதித்தார். படுகாயம் அடைந்த அவர் அவசர மருத்துவ வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டதாக நாளேடு கூறியது.

அந்த ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்று சொல்லப்பட்டது.

ஊடகத்திற்கு அளித்த பதிலில், இரவு மணி 8.55க்குச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) கூறியது.

சம்பவ இடத்திலேயே பெண் இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் அறிவித்தனர். மற்றொருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பு அந்த 22 வயது ஆடவர் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் இரவு 10 மணியளவில் அங்கு சென்றபோது காவல்துறையினர் புளோக்கின் குப்பைத் தொட்டிக்கு அருகே தடுப்புகளை அமைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த இடத்தைச் சுற்றி ரத்தக் கறைகள் காணப்பட்டன.

அதே புளோக்கின் வெற்றுத் தளத்தில் ஆணிடமும் பெண்ணிடமும் அதிகாரிகள் விவரங்களை கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கலக்கத்துடன் காணப்பட்டனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய ஆடவர், புளோக்கின் 12வது தளத்தில் அழுதுகொண்டிருந்தார். 12வது தளத்தையும் காவலர்கள் சுற்றிவளைத்துத் தடுப்புகளைப் போட்டிருந்தனர்.

அதே மாடியில் குடியிருக்கும் மாணவி, இரவு 9 மணியளவில் பலத்த சத்தம் கேட்டதாகக் கூறினார்.

“கட்டுமானப் பணிகள் நடக்கும் சத்தம்போல அது இருந்தது,” என்றார் அவர்.

மாணவியின் தாயார் இரவு 9.25க்கு அங்கு சென்றபோது மேலே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அதிகாரி ஒருவர், அந்தத் தாயாரை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அதே புளோக்கில் 6வது தளத்தில் வசிக்கும் இல்லத்தரசியான திருவாட்டி தேவியும் பலத்த சத்தத்தைக் கேட்டுள்ளார்.

அவர், கீழே பார்த்தபோது குப்பைத் தொட்டிக்கு அருகே ஓர் ஆடவர் விழுந்துகிடந்தார்.

தனது முழுப் பெயரை தெரிவிக்க மறுத்த அவர், கீழே விழுந்தவர் 12வது தளத்தில் வசிப்பதாகக் கூறினார்.

ஐந்தாவது மாடியில் வசிக்கும் பொதுச் சேவை ஊழியரான ஜோஹான் ஜஹாரியும் ஆடவர் ஒருவர் குப்பைத் தொட்டிக்கு அருகே தரையில் கிடந்ததைப் பார்த்துள்ளார்.

“அந்த ஆடவர் சுயநினைவுடன் வலியால் கதறி அழுதுகொண்டிருந்தார்,” என்றார் அவர்.

பின்னர் அங்கு வந்த, காயமடைந்தவரின் தாயார் என்று நம்பப்படும் ஒரு மாது, “மகனே, மகனே!,” என்று கதறி அழுதார்.

இவ்வாண்டு பிப்வரியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கணவனும் மனைவியும் பொங்கோலில் உள்ள வீவக வீட்டில் இறந்துகிடந்தனர்.

2024ஆம் ஆண்டில் 10 கொலை வழக்குகள் பதிவாகின. அது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையாகும்.

குறிப்புச் சொற்கள்