பெண் ஒருவரின் முகத்தில் குத்தியதால் அந்தப் பெண்ணுக்குக் கடுமையான தலைக்காயம் ஏற்பட்டது. திருவாட்டி ரூபியா புவாங் எனப்படும் அந்த 59 வயதுப் பெண் பின்னர் உயிரிழந்தார்.
அவரைக் குத்தியதாக சிங்கப்பூரரான அபு தலிப் ஜொஹாரி என்னும் 55 வயது ஆடவர் மீது ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக சாங்கி சிறைச்சாலை வளாக மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மனநலக் கழக அதிகாரிகள் அவரைப் பரிசோதித்த பின்னர் அறிக்கை அளித்துள்ளதாகக் காவல்துறை வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணையை இறுதிசெய்ய அவர் நீதிமன்றத்தில் ஆறு வார கால அவகாசம் கேட்டுள்ளார். இருப்பினும், ஆடவர் ஈடுபட்டது கடுமையான குற்றம் என்பதால் அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை.
ஜூன் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தெக் வை லேன் புளோக் 9ல் உள்ள வீவக வீட்டில் அந்தக் குற்றச் சம்பவம் நிகழ்ந்தது. அதில் சம்பந்தப்பட்ட ஆடவருக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு குறித்து நீதிமன்ற ஆவணங்கள் எதனையும் குறிப்பிடவில்லை.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபு தலிப்புக்கு 10 ஆண்டு வரையிலான சிறை, அபராதம், பிரம்படி போன்றவை தண்டனைகளாக விதிக்கப்படலாம்.