ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 16) பிற்பகலில் நேர்ந்த ஒரு சம்பவத்தில் 56 வயதுப் பெண் ஒருவர் மாண்டுபோனார்.
அவர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.
அங்கிருந்து பிற்பகல் 1.55 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
நினைவிழந்த நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அப்பெண் பின்னர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.
அப்பெண்ணுக்கு ஒருவர் இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்ததை ஸியாவ்ஹோங்ஷு சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளி காட்டியது. பின்னர் அக்காணொளி நீக்கப்பட்டுவிட்டது.
சம்பவம் நேர்ந்த இடத்தைச் சுற்றி ஜுவல் சாங்கி ஊழியர்கள் தடுப்புகளை அமைத்ததையும் காண முடிந்தது.
மாலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றபோது, சம்பவத்தைத் தாங்கள் கண்டதாகவும் ஆனால் அதுபற்றி பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்விடத்தில் உள்ள கடைகளின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் பற்றிக் கருத்துரைத்த ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி லீ சிங் வென், “நேர்ந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இறந்தவரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.
மேலும், விசாரணை தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்க அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2024 மார்ச் 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்த சம்பவம் பதிவானது. முதலாம் முனையத்தின் டாக்சி நிறுத்தத்திற்கு அருகே 20 வயது ஆடவர் ஒருவர் அசைவின்றி விழுந்து கிடந்தார். சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.