புளோக் 93 ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள வீவக வீட்டில் இயற்கைக்கு மாறாக 67வயது மாது ஒருவர் இறந்த நிலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டார்.
அதே வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த மாதின் 70 வயது கணவர் மீட்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார் எனக் காவல்துறை தெரிவித்தது.
அந்த மாதின் மரணத்தை இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தியுள்ள காவல்துறை, ஆயினும் தவறு எதுவும் நடந்திருப்பதாக சந்தேகிக்கவில்லை எனவும் தெரிவித்தது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஷின்மின் நாளேட்டிடம் பேசிய குடியிருப்பாளர் ஒருவர், அவ்விணையர் தங்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்மீது பேரன்பு வைத்திருந்ததாகச் சொன்னார்.
அவ்விணையரின் பிள்ளைகள் வாரயிறுதி நாள்களில் அவர்களைச் சந்திப்பர் என்றும் அப்போது 67 வயது மாது ஒருவர் அவர்களுக்கு சமையல் உதவிசெய்ய வருவார் என்றும் அக்குடியிருப்பாளர் கூறினார்.
அவ்விணையர் நடமாடுவதற்கு சக்கர நாற்காலிகளைச் சார்ந்திருந்தனர். அவர்கள் வழக்கமாக நாள்தோறும் காலை உணவு உண்பதற்காக தங்களின் வீட்டைவிட்டுச் செல்வார்கள். ஆனால் பல நாள்களாக அவர்களை வெளியில் காண முடியவில்லை என்று மற்ற குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.