ஜூ சியாட்டில் உள்ள வீடு ஒன்றில் ஒரு பெண் மாண்டு கிடந்தது தொடர்பாக 40 வயது ஆடவர் காவல்துறை விசாரணையின்கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 15) ஜூ சியாட் வட்டாரத்தின் எவரிட் ரோட்டில் உள்ள வீட்டுக்குள் அந்த 43 வயதுப் பெண் அசைவின்றிக் காணப்பட்டார்.
அது குறித்து அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் கொலை என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்படுவதாகவும் ஆடவருக்கு எதிரான விசாரணை தொடருவதாகவும் காவல்துறை கூறியது.
உயிரிழந்த பெண்ணைப் பற்றி அறிந்த அந்த ஆடவர், உதவிக்கான அழைப்புகள் விடுக்கப்படும் முன்னரே சிங்கப்பூரைவிட்டுச் சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் நிகழ்ந்த வீடு, எவரிட் ரோட்டிலுள்ள ‘லோட்டஸ்’ குடியிருப்புக் கட்டடத்தில் அமைந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.
அந்த வீட்டில் தம்பதியருடன் ஒரு குழந்தையும் இரு உதவியாளர்களும் வசித்ததாக, பெயர் குறிப்பிட விரும்பாத அண்டை வீட்டுக்காரப் பெண்மணி ஒருவர் ‘சிஎன்ஏ’விடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது காலியாக உள்ள அந்த வீட்டில் செப்டம்பர் 16ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளைக் கண்டதாகச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் யாருடனும் பழகக்கூடியவர்களாக இல்லை என்றும் அங்கு பெரிய சத்தமோ வேறு எதுவுமோ கேட்காத நிலையில் இன்னும் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை என்றும் அவர் சொன்னார்.