தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோ பாயோ புளோக்கிலிருந்து விழுந்து பெண் மரணம்

1 mins read
3b22b270-7d13-4d59-bb2a-633b2299a578
தோ பாயோ லோரோங் 7ல் உள்ள புளோக் 9இலிருந்து உதவி கேட்டு வியாழக்கிழமை (செப்டம்பர் 25) காலை 9 மணிக்கு அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. - படங்கள்: ‌ஷின் மின் டெய்லி நியூஸ்

தோ பாயோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றிலிருந்து கீழே விழுந்து பெண் ஒருவர் மரணமடைந்தார். சம்பவ இடத்திலேயே அவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சன்னல்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது விழுந்த அவர், பணிப்பெண் என்று நம்பப்படுகிறது.

சம்பவம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) நடந்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் கேட்ட கேள்விக்குப் பதில் தந்த காவல்துறை, தோ பாயோ லோரோங் 7ல் உள்ள புளோக் 9இலிருந்து உதவி கேட்டு அன்று காலை 9 மணிக்கு அழைப்பு வந்ததாகக் கூறியது.

புளோக்கின் அடித்தளத்தில் 39 வயதுப் பெண் அசைவின்றிக் கிடந்ததாக அது தெரிவித்தது. அவர் மாண்டதைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உறுதிசெய்தது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று காவல்துறை கூறியது. பணிப்பெண் சன்னல்களைச் சுத்தம் செய்தபோது விழுந்திருக்கக்கூடும் என்று அவரின் முதலாளி ‌ஷின் மின் டெய்லி நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.

பணிப்பெண், செப்டம்பர் 20ஆம் தேதிதான் வேலையைத் தொடங்கியதாக அவர் சொன்னார். சம்பவம் நேர்ந்தபோது தாமும் தமது குடும்பத்தினரும் உறங்கிக்கொண்டிருந்ததாக முதலாளி கூறினார்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்