வீவக குடியிருப்பில் மூன்று இடங்களில் தீ வைத்த பெண்ணுக்குச் சிறை

வீவக குடியிருப்பில் மூன்று இடங்களில் தீ வைத்த பெண்ணுக்குச் சிறை

2 mins read
b2ec4009-2ed5-48c0-9c40-47a14cb4aede
குற்றவாளியான லிண்டா லியோங் சோக் கூன் கடந்த 2025 மார்ச், ஏப்ரல் மாதங்களில் மும்முறை தீ வைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பு ஒன்றில் தீ வைத்த பெண்ணுக்கு ஐந்தாண்டுகளும் மூன்று மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

லிண்டா லியோங் சோக் கூன், 54, என்ற அப்பெண், இரு அண்டை வீடுகளின் வாயிலிலும் மின்தூக்கி முகப்பிலும் தீ வைத்தார்.

கடந்த 2025 மார்ச் 18ஆம் தேதியன்று, ஒரு துவாலையில் தீமூட்டி, அதனை 63 வயது ஆடவர் ஒருவரின் வாயிற்கதவுமீது போட்டுச் சென்றார் லிண்டா. அவ்வழியே சென்ற இன்னோர் ஆடவர், உலோகக் கதவும் மரக்கதவும் எரிந்திருந்தது கண்டு, அந்த வீட்டின் குடியிருப்பாளருக்கு விழிப்பூட்டினார்.

அதற்கு இரு நாள்களுக்குப் பிறகு, அதாவது மார்ச் 20ஆம் தேதி இரவு 11.50 மணியளவில், லிண்டா அந்த புளோக்கின் மின்தூக்கி முகப்பில் ஒரு மெத்தையைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

அதனால், அந்தப் பொதுத் தாழ்வாரத்தின் சுவரும், உட்கூரையும், தரையோடுகளும் சேதமடைந்தன.

தீயால் கிளம்பிய புகையால் அண்டை வீட்டிலிருந்த 20 வயதுப் பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் அவசர மருத்துவ வாகனம் மூலம் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2025 மார்ச் 21ஆம் தேதி லிண்டா கைதுசெய்யப்பட்டார். பின்னர் அன்றே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆயினும், அடுத்த மாதமே லிண்டா மீண்டும் குற்றம் புரிந்தார்.

2025 ஏப்ரல் 11ஆம் தேதி அதிகாலை 11 மணியளவில் 46 வயது ஆடவர் வீட்டிற்குச் சென்ற லிண்டா, தாம் கொண்டுசென்ற பூட்டால் அவ்வீட்டின் முன்கதவைப் பூட்டினார். பின்னர் அக்கதவிற்கு அவர் தீ வைத்தார்.

லிண்டாவின் செயல் குறித்து அந்த ஆடவர் காவல்துறைக்குப் புகார் அளித்தார். அவரை நோக்கிக் கத்தியைக் காட்டிய லிண்டா, அவர் வெளியே வந்தால் குத்திவிடுவதாகவும் மிரட்டினார்.

அதனைத் தொடர்ந்து, அன்று காலை 6.30 மணியளவில் லிண்டா மீண்டும் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்