சாங்கி விமான நிலையத்தில் $24,000க்கும் அதிக மதிப்புள்ள சருமப் பராமரிப்புப் பொருள்களைத் திருடிய 49 வயது தகேடா மைலின் ஃபுட்டாலனுக்குச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விமானநிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்தபோது இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் அவர் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
அவர் திருடிய பொருள்களில் சேனல் (Chanel), டியோர் (Dior), டிப்டிக் (Diptyque) ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்களின் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்கள், ஒப்பனை, சருமப் பராமரிப்புப் பொருள்கள் ஆகியவை அடங்கும்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதிக்கும் மே 22ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தது 108 முறை காட்சிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 147 பொருள்களை அவர் திருடியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பணி இடைவேளையின்போது, கரோசல் (Carousell) மூலமாகவோ அல்லது வாய்மொழித் தகவல் மூலமாகவோ அப்பொருள்களை அதன் விற்பனை விலையிலிருந்து 50 விழுக்காடு தள்ளுபடி செய்து விற்றதாகக் கூறப்பட்டது.
கடையில் இருந்த பொருள்களின் இருப்பு குறைவதைக் கண்டறிந்த அக்கடை நிர்வாகிகள் அதைக் கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையில் தகேடா கையும் களவுமாகப் பிடிபட்டார்.

