குறும்புச் செயலை ஒப்புக்கொண்ட மாது

2 mins read
2022ல் அண்டை வீட்டாருக்குத் தொல்லை கொடுத்தவர்
7e94d769-df96-437a-b2f6-bc059d681f35
லிம் சோக் லே, குறும்புச் செயல் தொடர்பாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிப்ரவரி 3ஆம் தேதி ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈராண்டுகளுக்குமுன் தன் மகன் கலந்துகொண்ட சிங்க நடனப் போட்டியின்போது இடையூறு விளைவித்ததை 52 வயது லிம் சோக் லே எனும் மாது ஒப்புக்கொண்டுள்ளார்.

கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் உள்ள வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்க நடனத்துக்காக வடிவமைக்கப்பட்ட உருவத்தின் தலைப் பகுதியில் காப்பியை ஊற்றி, இவர் அதை உதைத்ததாகக் கூறப்பட்டது. இதனால் $1,300க்கும் மேற்பட்ட இழப்பு ஏற்பட்டது.

மேலும், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி காலை 8 மணிக்குமுன் பொங்கோலில் உள்ள காப்பிக்கடையில் ஓர் ஆடவரை லிம் பலமுறை தள்ளியதாகக் கூறப்படுகிறது.

குறும்புச் செயலில் ஈடுபட்டது, மற்றொருவரைத் தாக்கியது ஆகியவை தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை பிப்ரவரி 3ஆம் தேதி, லிம் ஒப்புக்கொண்டார்.

அவரது கணவர் சியாங் எங் ஹாக், 60, மீதும் நடனப் போட்டிக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தம்பதி, தங்கள் 25 வயது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அவர் சிங்க நடனப் போட்டியில் கலந்துகொள்வதைத் தடுக்க முயன்றனர்.

இவர்கள், 2020ம் ஆம் ஆண்டில், மருத்துவமனையில் தாதியாக வேலைபார்க்கும் பக்கத்து வீட்டுக்காரரையும் அவரது குடும்பத்தினரையும் நோக்கி, “கொவிட்”, “கொவிட்டைப் பரப்புபவர்கள்”, “கிருமி”, “கிருமிக் குடும்பம்” என்ற சொற்களை உரத்துச் சொன்னதுடன் அவர்கள் இருந்த திசையில் கிருமிநாசினித் திரவத்தைத் தெளித்ததாகக் கூறப்பட்டது. இதனால், 2022 பிப்ரவரியில் லிம்முக்கு 4,000 வெள்ளியும் சியாங்கிற்கு 1,200 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டது.

பிப்ரவரி 26ஆம் தேதி லிம்முக்குத் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்