சிங்கப்பூரில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, ஒரு பெண்ணும் அவரது கணவரும் போதிய உணவும் தண்ணீரும் இன்றி அசுத்தமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் 71 பூனைகளைக் கைவிட்டுச் சென்றனர்.
அங்கிருந்து பின்னர் விலங்குகளின் சடலங்களும் மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. குளிரூட்டிப் பெட்டி அமைந்திருக்கும் வெளிப்புறப் பகுதியில் தவித்த நிலையில் அமர்ந்திருந்த பூனை ஒன்றைப் பற்றி அண்டை வீட்டார் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அவர்களின் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
விலங்குகளுக்குத் தேவையற்ற வலியையும் துன்பத்தையும் விளைவிக்க அனுமதித்ததாகச் சுமத்தப்பட்ட 24 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 33 வயது நூருல் நடியா நூர் முகம்மதுக்கு வியாழக்கிழமை (நவம்பர் 12) 16 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், 12 மாதங்களுக்குச் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவரது கணவர், 37 வயது முகம்மது கைருல் நயிம் ஸைனுலுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி 16 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தத் தம்பதி 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள ஒரு வீட்டை வாங்கியபோது, அவர்களிடம் செல்லப்பிராணிகள் எதுவும் இருக்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கருத்தடை செய்யப்படாத சில பூனைகளை அவர்கள் வாங்கியதைத் தொடர்ந்து, அவை மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யத் தொடங்கின.
அதன் பிறகு, 2022 ஏப்ரல் மாதத்தில், அந்தத் தம்பதி கைருலின் பெற்றோருடன் தங்குவதற்காக அந்த வீட்டிலிருந்து வெளியேறினர். ஆனால், பூனைகளை அந்த வீட்டிலேயே விட்டுச் சென்றனர். சில மாதங்களுக்குப் பிறகு, பயனீட்டுக் கட்டணங்கள் செலுத்தப்படாததால் அந்த வீட்டின் தண்ணீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
காவல்துறையினர் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு மொத்தம் 61 உயிருள்ள பூனைகள், மூன்று பூனைகளின் சடலங்கள், ஆறு மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் அடங்கிய ஒரு பை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
