சொங் பாங் கிளை அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 12) நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்தைப் பெண்கள் இருவர் இடைமறித்துத் தகராறு செய்தனர்.
இது தொடர்பான 7 நிமிடக் காணொளி அமைச்சர் சண்முகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்தப் பெண்கள் இணையத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவலைப் பரப்புவதற்கு எதிரான ‘பொஃப்மா’ சட்டம் பற்றிப் பேச திரு சண்முகத்தை அணுகியதாகத் தெரிகிறது.
முன்புறத்தில் ‘செய்தித்துறை’ (Press) என்ற சொல்லும் பின்புறம் காஸாவில் கொல்லப்பட்ட நிருபர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்த சட்டைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.
‘பொஃப்மா’ சட்டம் குறித்து, அவர்கள் சண்டையிடும் தொனியில் அமைச்சரிடம் கேள்வி கேட்டதோடு அங்கிருந்தவர்களை நோக்கி தகாத சமிக்ஞையைக் காட்டினர்.
ஒரு கட்டத்தில் பணியைத் தொடரச் சென்ற திரு சண்முகத்தைப் பார்த்து அந்தப் பெண்கள் உரத்த குரலில் கத்தத் தொடங்கினர்.
சகோதரிகளான அந்தப் பெண்கள் இருவரும் நீ சூன் குழுத் தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் அல்லர் என்று தமது பதிவில் குறிப்பிட்ட திரு சண்முகம், கடந்த சில மாதங்களில் மக்கள் செயல் கட்சியின் மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்குச் சென்று சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொள்ளும் ஒரு சிறு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.
அத்தகைய சம்பவத்துக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து முடிந்த அளவு அவதூறு பரப்பும் வகையில் நடந்துகொள்வதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தகராறு செய்த பெண்கள் ‘மண்டே ஆஃப் பாலஸ்தீன் சோலிடெரிட்டி’ (Monday of Palestine Solidarity) என்ற ஆர்வலர் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
அந்தக் குழு இதுவரை குறைந்தது 10 மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் தகராறு செய்துள்ளது.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஜாலான் புசாரில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கலந்துகொண்ட மக்கள் சந்திப்புக் கூட்டங்களும் அவற்றில் அடங்கும்.