சுகாதார அமைச்சு, பரம்பரை மார்பகப் புற்றுநோய்க்கும் கருப்பைப் புற்றுநோய்க்கும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு மானியம் வழங்க முன்வந்துள்ளதைச் சிங்கப்பூர்ப் பெண்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
அத்தகைய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான அறுவைச் சிகிச்சைகளுக்கு மெடிஷீல்ட் லைஃப், மெடிசேவ் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டணங்கள் செலுத்த அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதையும் பெண்கள் வரவேற்றனர்.
புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை இனி முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என்று பெண்கள் பலர் தெரிவித்தனர்.
அத்துடன் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான கட்டணங்களுக்குக் காப்புறுதி நிறுவனங்களிடம் அடிக்கடி செல்வதையும் தவிர்க்க சுகாதார அமைச்சின் அறிவிப்புகள் உதவும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கருப்பைப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளுக்கு மானிய கட்டணங்களை இவ்வாண்டு டிசம்பரிலிருந்து மேற்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுக் கலந்துரையாடலின்போது இம்மாதம் 5ஆம் தேதி முன்வைத்தார்.
இவ்வாண்டு பிற்பாதியிலிருந்து புற்றுநோய் அபாயங்களைக் குறைப்பதற்கான அறுவைச் சிகிச்சைகளுக்கு மெடிஷீல்ட் லைஃப், மெடிசேவ் ஆகியவற்றைப் பெண்கள் பயன்படுத்தத் தொடங்கலாம் என்று அவர் அறிவித்தார்.
சிங்கப்பூர்ப் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 2,000 அதிகமான சிங்கப்பூர்ப் பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. 400க்கும் அதிகமானோர் அதனால் உயிரிழக்கின்றனர்.
2024ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள 572 ஆசியக் குடும்பங்களில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 150 தனிநபர்களில் ஒருவரிடம் மரபணு உருமாற்றம் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் விளைவாக, பெண்களிடையே மார்பகப் புற்றுநோயும் கருப்பைப் புற்றுநோயும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரு ஓங், பெண் ஒருவரிடம் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவரது நேரடி குடும்ப உறுப்பினர்களிடமும் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று கூறினார்.

