தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்மொழிக் கல்வியில் சிகரத்தை எட்டிய பெண்கள்

3 mins read
a7d0c81c-54fe-4286-bd78-cfaae8f96333
(இடது) டாக்டர் இந்துமதி வெங்கடாசலம், ஆசிரியர் கலைவாணி ராமசாமி. - படம்: இந்துமதி

தமிழ் கற்கும் மருத்துவர்

 டாக்டர் இந்துமதி வெங்கடாசலம்.
 டாக்டர் இந்துமதி வெங்கடாசலம். - படம்: கலைவாணி ராமசாமி

தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வத்தாலும், அம்மொழியை ஆழ்ந்து படிக்க வேண்டும் எனும் ஆசையினாலும் தமிழ் மொழியில் பட்டக்கல்வியை மேற்கொண்டு, தலைசிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளார் தொழில்முறையில் மருத்துவரான டாக்டர் இந்துமதி வெங்கடாசலம்.

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் தொற்றுநோய்ப் பிரிவின் மூத்த ஆலோசகராகப் பணிபுரியும் இவர், அயராத பணிகளுக்கு இடையிலும் மூன்றாண்டுகள் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பி ஏ தமிழ் மொழி, இலக்கியப் படிப்பை மேற்கொண்டார்.

தங்கப் பதக்கத்துடன் தலைசிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ள டாக்டர் இந்துமதி, “தமிழ்மொழியின் தொன்மை, மரபு, குறித்து பேசுவதில் நாம் பெருமை கொள்வது சரிதான்,” என்றார்.

பள்ளிக் கல்வியின்போது பெற்ற அடிப்படைத் தமிழ் மட்டுமே அறிந்திருந்த டாக்டர் இந்துமதிக்கு, இலக்கணமும் இலக்கியமும் ஆழமாகக் கற்பது முதலில் சிரமமாக இருந்தது. ஆசிரியர்களும் சக மாணவர்களும் கற்றல் பயணத்தில் அவருக்கு உதவினர்.

குடும்பத்தினர் தமிழ் படிப்பதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பாமல் இல்லை. எனினும் அதுவெல்லாம் அவர் ஆர்வத்துக்குத் தடையாக இருக்கவில்லை.

“கற்றலுக்கு வயது, தொழில், நேரமின்மை என எதுவும் தடையாகாது,” என்று சொன்னார்.

கடலளவுள்ள தமிழ்மொழியில் தாம் இதுவற்றை கற்றதுகூட கைம்மண் அளவுதான் என்று சொன்ன இந்துமதி, “மொழிக்கும் தொழிலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை,” என்றார்.

“மருத்துவராக, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாட்டு மருத்துவர்களைச் சந்தித்துள்ளேன். அவர்களில் பலரும் தங்கள் தாய்மொழியில் மருத்துவம் படித்துள்ளனர். பிற நாட்டு மருத்துவப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றி பெறுகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“தமிழ் சோறு போடுமா என்று கேட்கிறார்கள். தமிழ் சோறு போடத் தேவையில்லை. மொழி பயன்பாட்டுக்கானது, பண்பாட்டினைக் காப்பது,” என்ற டாக்டர் இந்துமதி, “எல்லா தொழில்களிலும் கலைச்சொற்கள் உருவாக்க வேண்டும். அனைவரும் மொழியில் ஆர்வத்துடன் செயல்பட்டு தமிழை வாழும் மொழியாகத் தொடர்ந்து போற்ற வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ் சோறு போடுமா என்று கேட்கிறார்கள். தமிழ் சோறு போடத் தேவையில்லை. மொழி பயன்பாட்டுக்கானது, பண்பாட்டினைக் காப்பது.
டாக்டர் இந்துமதி வெங்கடாசலம்

முனைவராகும் கனவுப்பயணம்

பொறுப்புகளையும் கல்வியையும் ஒருசேர சமாளித்து பட்டம் பெற்ற ஆசிரியர் கலைவாணி ராமசாமி.
பொறுப்புகளையும் கல்வியையும் ஒருசேர சமாளித்து பட்டம் பெற்ற ஆசிரியர் கலைவாணி ராமசாமி. - பட: கலைவாணி ராமசாமி

தமிழ்மொழியைப்பயின்றால் சிங்கப்பூரிலும் அனைத்துலக அளவிலும் பலதரப்பட்ட வாய்ப்புகள் குவியும் என நம்புகிறார் ஆசிரியர் கலைவாணி ராமசாமி, 48.

நெகிழ்வுமிக்க துணைமை ஆசிரியராகப் (Flexi-Adjunct Teacher) பணியாற்றி வரும் கலைவாணியும், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தமிழ் மொழி பயின்றுள்ளார்.

“பணி, குடும்பப் பொறுப்புகள் என அனைத்தையும் ஒருசேர சமாளிப்பது சிரமந்தான்,” என்ற கலைவாணி, தாம் படித்த அதே காலகட்டத்தில் தம்முடைய மகனின் சாதாரணநிலைத் தேர்வுகளும் வந்ததால் அனைத்தையும் நிர்வகிப்பது கடினமாக இருந்ததாகச் சொன்னார்.

“நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து எதற்கு முன்னுரிமை தருவது எனச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்,” என்கிறார் இவர்.

அதன்படி தமது கல்வியில் சிறப்பாகச் செயலாற்றி தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வழங்கும் வெள்ளிப்பதக்க விருதினையும், அடைக்கம்மை பழனியப்பன் அபிராமி ஜுவல்லர்ஸ் வழங்கும் மொழி, இலக்கியப் பரிசுகளையும் வென்றுள்ளார்.

இந்தப் படிப்பால் மொழி மீதான தமது ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறிய கலைவாணி, எதிர்காலத்தில் முதுகலைத் தமிழ் படித்து முனைவர் பட்டமும் பெற வேண்டும் எனும் கனவுடன் உள்ளார்.

பகுதிநேரத் தமிழ் படிப்பு

தமிழ்மொழி ஆர்வலர்களும், தமிழில் மொழி, இலக்கியத் திறனை வளர்த்துக்கொள்ள எண்ணுவோரும், தமிழாசிரியர் பணியில் சேர விரும்புவோரும் தமிழ் கற்க சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்ப் பட்டப்படிப்பினை வழங்குகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இப்பட்டப்படிப்பில் இதுவரை ஏறத்தாழ 370க்கும் மேற்பட்டோர் பட்டம் பெற்று தமிழாசிரியர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் பணியாற்றி வருவதாகச் சொன்னார் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மணிவண்ணன்.

சிங்கப்பூரில் தமிழ்மொழி, இலக்கியத்தில் சேர்த்துப் பட்டமளிக்கும் ஒரே பல்கலைக்கழகமாக இது திகழ்கிறது என்றும் சொன்னார். 50 விழுக்காடு மொழி, 50 விழுக்காடு இலக்கியம் என வகுக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டம், மேலும் சில பல்கலைக்கழக அடிப்படைப் பாடங்களையும் உள்ளடக்கியது என்றார்.

இது பகுதிநேரப் பட்டப்படிப்பு என்பதால் 21 வயது நிரம்பிய எவரும் இந்தப் பட்டப்படிப்பில் சேர முடியும். அவர்கள் இந்த இளங்கலைத் தமிழ்ப் பட்டப்படிப்பை மூன்று முதல் எட்டு ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்யலாம். இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தினகரன் புலமைப்பரிசு, பல்கலைக்கழகம் வழங்கும் உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்