உட்லண்ட்ஸ் ஃபேர்பிரைசில் விளம்பரப்பலகை விழுந்து மூதாட்டிக்குக் காயம்

2 mins read
20d98ba5-7b4c-4092-9c27-c62611eb0943
இதே போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, விளம்பரப்பலகை மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படங்கள்: ஷின் மின் டெய்லி நியூஸ்

விளம்பரப்பலகை ஒன்று 68 வயது மூதாட்டி மீது விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.

உட்லண்ட்ஸ் வட்டாரத்திலுள்ள 888 பிளாசா கடைத்தொகுதியின் ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் இச்சம்பவம் நவம்பர் 25ஆம் தேதி இரவு 7 மணியளவில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

தமது குடும்பத்தோடு 41 வயது திரு யே பேரங்காடியில் இருந்தபோது ‘டைகர் பியர்’ விளம்பரப்பலகை ஒன்று மேலிருந்த அடுக்கிலிருந்து கீழே விழுந்து அவரின் தாயாரின் முதுகுப் பகுதியில் பட்டது.

பலகையின் கூரான முனை, அவரின் சட்டையைக் கிழித்ததுடன் தோலில் ஒரு சிராய்ப்பையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, பேரங்காடியின் மேலாளர், திரு யேவின் தொடர்பு எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டதுடன் தம் மேலதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

காயங்கள் கடுமையாக இல்லாத காரணத்தால் மருத்துவரைப் பார்க்கத் தேவையில்லை என்று மூதாட்டி முடிவெடுத்தார். காயத்திற்கு மருந்திட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, திரு யேவின் தாயாரது கிழிந்த ஆடைக்கு இழப்பீடாக ஃபேர்பிரைஸ் $100 வழங்க விரும்புவதாக இரண்டு நாள்கள் கழித்து தொடர்புகொண்டு கூறியது. இருப்பினும், திரு யே அதை ஏற்க மறுத்துவிட்டார்.

மீண்டும் பேரங்காடி அவருடன் தொடர்புகொண்டு முதலில் $80, பின்னர் $100 எனக் கொடுக்க விரும்புவதாகக் கூறியும் திரு யே மறுபடியும் மறுத்துவிட்டார்.

பலகை தம் மனைவியின் தலையில் அல்லது மகனின் தலையில் விழுந்திருந்தால் விளைவுகள் விபரீதமாக இருந்திருக்கலாம் என்றும் ஃபேர்பிரைஸ் போதுமான அளவு சம்பவம் குறித்து வருத்தப்படுவதாகத் தமக்குத் தோன்றவில்லை என்றும் திரு யே சுட்டினார்.

பேரங்காடியின் பேச்சாளர் இந்த விவகாரத்தில் இணக்கம் காணத் தொடர்ந்து திரு யேவையும் அவரின் தாயாரையும் தொடர்புகொண்டு வருவதாக ‘எம்எஸ்நியூஸ்’ தளத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்